அரசாங்கம் திருடர்களை சரியாக பிடித்திருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது

139 0

நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி,நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதனை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது.

இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ச,மஹிந்த ராஜபக்ச,பசில் ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ரால்,எஸ்.ஆர்.ஆடிகல,பி.பி. ஜயசுந்தர,டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் சமந்தா குமாரசிங்க போன்றவர்களைத் தவிர பொறுப்புக் கூற வேண்டிய மேலும் பலர் இந்த அரசாங்கத்தில் உள்ளனர்.

இந்த ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வரிச்சுமைக்கு ஆளான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வற் வரியை அறவிடமால், திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எரிவாயு,சீனி,நானோ நைட்ரஜன்,நிலக்கரி மற்றும் மல உர ஊழல்கள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

எரிவாயு,சீனி,நானோ நைட்ரஜன்,நிலக்கரி, மல உரம் போன்றவற்றுக்கு எதிரான விசாரணைகள் தாமதமாக இடம்பெற்றாலும்,

நுண்,சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு பரேட் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

2019-2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல முறைகேடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு விசாரணைகள் தொடர்பான பல சிக்கல்கள் உள்ளன.இது தொடர்பில் தனித்தனியாக வினவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சீனி வரி மோசடிக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இதன் பிரகாரம்,2020 ஆம் ஆண்டு 1 கிலோ சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக அரசாங்கம் குறைத்ததன் காரணமாக,நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில், அரசாங்கத்திற்கு ரூ.16707 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக 23.3.2022 அன்று வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கோபா குழுவிற்கு அறிக்கையை அனுப்பிய பிறகு, வருமானம் பெறாததற்கு பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண 21 ஜூன் 2022 அன்று சி.ஐ.டி.க்கு அனுப்பி வைக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்து விட்டன. இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் யார் என கேள்வி எழுப்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதால் 10000 மில்லியன் ரூபா நஷ்டம்

இலகு ரயில் திட்டம் எந்த தர்க்க ரீதியான அடிப்படையும் இல்லாமல் இடைநடுவிலையே நிறுத்தப்பட்டதால் 10000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக 23.11.2022 அன்று வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த விசேட கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 13 மாதங்கள் கடந்துள்ள போதிலும்,கோப் அல்லது கோபா குழுக்களில் கருத்தில் கொள்ளாததற்கான காரணங்களை அவர் கேள்வி எழுப்பினார்.இந்த முட்டாள்தனமான முடிவால்,ஜப்பான் நாடு இன்னும் நமது நாட்டுடன் சிறந்த மனதுடன் இல்லை.இதனால்,இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

சேதன உரங்களால் ஏற்பட்ட இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை.

2021-2022 ஆம் ஆண்டில் 96000 மெட்ரிக் டொன் சேதன உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதால்,அரசாங்கத்திற்கு 69000

அமொ.டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், கணக்கிடப்படாத பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 26.8.2022 திகதியிடப்பட்ட  விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது வெளியிடப்பட்டு 16 மாதங்கள் கடந்துள்ள போதிலும்,கோப் அல்லது கோபா குழுக்களால் இது தொடர்பில் இதுவரை ஏன் பரிசீலிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

நானோ நைட்ரஜன் மோசடி கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

ஒரு போத்தல் நானோ நைட்ரஜன் திரவ உரம் 5.25 அமொ.டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமாக இருந்தாலும்,12.45 மற்றும் 10 அமொ.டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு 711 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக 12.13.2023 திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இழப்பு யாது? இந்த அறிக்கை எப்போது கோப் அல்லது கோபா குழு முன் பரிசீலிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

நிலக்கரி ஊழலினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவது எப்போது?

நிலக்கரி நிறுவனத்தால்,500 பில்லியன் பொறுமதியான கொள்முதலை தகுதியில்லாத வழங்குநருக்கு வழங்குவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு முன் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை என்றும்,கொள்முதல் குழுவும்,தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் இந்தப் பணிகளைச் சரியாகச் செய்யவில்லை என்றும் 30.9.2022 திகதியிட்ட விசேட கணக்காய்வு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின் பரிந்துரைகளுக்கு பொது அலுவல்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ள நேரத்தில்,அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் அந்த இழப்பை ஈடுகட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

எரிவாயு மோசடிக்கு யார் பொறுப்பு?

எல்.பி.ஜி கொள்முதலின் போது,சியாம் கேஸ் ட்ரேடிங் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யாமல்,ஓகிம் டிரேடிங்கில் நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்தமையினால், அரசாங்கத்திற்கு 1138 அமொ.டொலர் மேலதிக செலவு ஏற்பட்டது.முறையான நிதி மதிப்பீடு அல்லது நிதி உறுதிப்படுத்தல் இல்லாமல் எரிவாயுவை கொள்வனவு  செய்ததால்,கப்பல்களுக்கு கூட 210 மில்லியன் ரூபா 5 மாத காலத்திற்கு மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக 11.12.2022 ஆம் திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கை கோப்  மற்றும் கோபா குழுக்களில் பரிசீலிக்கப்படவில்லை.இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார்.

அதிக கடன் பெற்று அதனை மீளச் செலுத்தாதுள்ள பிரதான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

கிட்டிய காலத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.தான் சபையில் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சரியான பதில்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

இலங்கை வங்கியிலும்,மக்கள் வங்கியிலும் அதிக தொகை கடன் பெற்று அதனை மீளச் செலுத்தாதுள்ள 10 வர்த்தகர்களின் பெயர்களை வெளியிடுமாறு வினவிய போதும் இன்றும் இதற்கான பதில் கிடைக்கவில்லை. பரேட் சட்டத்தை அமுல்படுத்தி சாதரண நபர்களின் சொத்துக்களை ஏலம் விடுவதை விடுத்து,பாரிய தொகை கடன் செலுத்தாதுள்ள அரசாங்க தரப்பு,நட்பு வட்டார பிரதான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எப்போது என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.