கேகாலை – மாவனல்லை பிரதேசத்தில் 9 வயது சிறுமியை அவரது வீட்டிற்கு அருகில் குரங்குகள் தாக்கி காயப்படுத்திய சம்பவம் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த சிறுமியின் தாய் இது தொடர்பில் தெரிவிக்கையில் ,
குறித்த சம்பவத்தின் போது நான் நெல்லை வேக வைத்து வீட்டின் முற்றத்தில் காயவைத்திருந்தேன். இந்நிலையில் எனது மகன் காயவைத்திருந்த நெல்லை உண்ண வந்த குரங்குகளை துரத்திக் கொண்டடிருந்தார்.
இதன்போது எனது மகள் வீட்டின் முற்றத்தில் காணப்பட்டார். இந்நிலையில் நெல்லை உண்ண வந்த 4 குரங்குகள் எனது மகளின் மீது பாய்ந்த போது அவர் பயந்து ஓட முற்பட்ட போது கீழே வீழ்ந்துவிட்டார்.
இதன்போது அங்கிருந்து குரங்கு எனது மகளின் முழங்கால் பகுதியை கடித்து காயப்படுத்தியது. பின்னர் எனது மகன் வீட்டில் இருந்த பொருள் ஒன்றினால் குரங்குகளை தாக்கி அவற்றை அங்கிருந்து துரத்திவிட்டார்.
இதனையடுத்து நான் எனது மகளை மாவனல்லை அரச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன். அங்கிருந்த வைத்தியர் “குரங்கிற்கு இரத்த சுவை பழகினால் அடிக்கடி மகளையும் வேறு மனிதர்களையும் தாக்க ஆரம்பித்துவிடும்” என்று கூறினார்.
இந்நிலையில் குரங்குகள் அதிகரித்துள்ள கேகாலை பிரதேசத்தில் பெரும்பாலான மக்கள் குரங்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கேகாலை பிரதேசத்தில் மாத்திரம் இலட்சத்துக்கும் அதிகமான குரங்குகள் வசித்து வருவதாக கேகாலை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது என்று கூறினார்.

