ஏழு கோடி ரூபா மின்கட்டணத்தை பாராளுமன்றம் செலுத்தவில்லை என பாராளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தொழிற்சங்க தலைவர் ரஞ்சன் ஜயலாலை பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைத்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுங்கள் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
எழு கோடி ரூபா மின்கட்டணத்தை பாராளுமன்றம் செலுத்தவில்லை என சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் பொய்யான செய்தி வெளியாகியுள்ளன. இந்த செய்தியை தொடர்ந்து நான் ஆராய்ந்து பார்த்தேன். ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தின் மின்கட்டணம் செலுத்தப்படுகிறது.
அதேபோல் ஜனாதிபதி செயலகத்தின் மின்கட்டணமும் முறையாக செலுத்தப்படுகிறது. எவ்வித நிலுவை கட்டணங்களும் இல்லை. ஆகவே பாராளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான விடயத்தை குறிப்பிட்டுள்ள தொழிற்சங்க தலைவர் ரஞ்சன் ஜயலாலை பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைத்து உரிய சட்ட நடவடிக்கை எடுங்கள் என்றார்.

