இந்திய பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயண குழுவுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா, தமிழ்நாடு – இராமநாதபுரம் கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயண குழுவினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
1974 ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கபட்ட போதிலும், இந்திய பாராம்பரிய மீனவர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தில், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள 5ஆவது சரத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் விசா உள்ளிட்ட எந்த அனுமதி இல்லாமல் குடும்பத்துடன் சென்று வழிபடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தொடர்ந்து நாட்டுப்படகில் பாரம்பரிய மீனவர்கள் தங்கள் குடும்பங்களுடன், பணம் வாங்காமல் தங்கள் உறவினர்களை திருப்பயணிகளாக அழைத்துக் கொண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு சென்று வந்தனர். இது சமீபகாலமாக பணம் வாங்கிக் கொண்டு விசைப்படகில் வெளியூரிலிருந்து வரும் திருப்பயணிகளை, சுற்றுலா பயணிகளை போல் அழைத்து வரும் இராமேஸ்வரம் பங்கு பாதிரியாரின் தலைமையிலான கச்சத்தீவு விழா குழுவில் உள்ள சில நபர்களுக்கு இடையூறாக இருந்ததால், கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயனத்தை 2014 ஆண்டு தடை செய்தனர்.
இதை எதிர்த்து பாரம்பரிய மீனவர்கள் தொடர்ந்து போராடினார். கடந்த 2018 ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயண உரிமையை மீட்டு உறுதிப்படுத்தினர். இதனடிப்படையில் 2019 ஆண்டு முதல் கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பாயண குழு கச்சத்தீவு திருப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் உயர்நீதிமன்ற ஆணையை மத்திய, மாநில அரசுகள் இதுவரை முழுமையாக செயல்படுத்தவில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் விசாரித்ததில், இலங்கை யாழ்ப்பாண ஆயர் இராமேஸ்வரம் பாதிரியாருக்கு மட்டும் தான் கச்சத்தீவு திருவிழா அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார், எனவே அவர்களை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இருநாட்டு பாரம்பரிய கத்தோலிக்க மக்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு சம்பந்தப்பட்டது. எனவே இருநாட்டு பாரம்பரிய மீனவர்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்திற்கு கத்தோலிக்க திருச்சபை மதிப்பளிக்க வேண்டும். பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உரிமையை கத்தோலிக்க திருச்சபை புறக்கணிக்க கூடாது.
எனவே இந்த ஆண்டு இந்திய பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உணர்வுக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை மதிப்பளிக்கும் வகையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அழைப்பிதழை கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயண குழுவுக்கும் அனுப்பவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.



