தேசிய பொங்கல் விழாவும் பேசப்படாத மலையக தேசியமும்…!

195 0

21 ஆம் திகதி மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் நகரில் கொண்டாடப்பட்ட  தேசிய பொங்கல் விழா பற்றிய விமர்சனங்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. அரசாங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்ற தேசிய நிகழ்வு என்று கூறப்பட்டாலும் இந்நிகழ்வில் மலையக அரசியல் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கைகளே ஓங்கியிருந்தன. புத்தசாசன அமைச்சின் கீழ் வரும் இந்து கலாசார திணைக்களம் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த தேசிய பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகள், விழாக்களை தேசிய ரீதியாக அனுஷ்டிக்கும் போது அதற்கென சில விசேட பண்புகள் உள்ளன. தேசிய நிகழ்வுகள் என்று கூறும் போது அங்கு நாட்டின் தலைவராகவும் முதற்குடிமகனாகவும் விளங்கும் ஜனாதிபதியின் பிரசன்னம் இருத்தல் கெளரவமாகவும் பெருமையாகவும் கருதப்படுகின்றது. அவருக்கு அடுத்ததாக பிரதமர் உள்ளார். ஆனால் ஜனாதிபதி, பிரதமர் இருவரின் பிரசன்னத்துடன் இந்த நிகழ்வு இடம்பெறும் என்று பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இருவருமே இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

புத்தசாசன அமைச்சர்  விதுர விக்ரமநாயக்க மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோரே இந்நிகழ்வின் பிரதான அரசியல் பிரமுகர்களாக இருந்தனர். வடமாகாண ஆளுநரும் இதில் கலந்து கொண்டிருந்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளாத ஒரு நிகழ்வை தேசிய நிகழ்வாக அங்கீகரிக்க முடியுமா என்பது தெரியவில்லை. மேலும் இது முழுக்க முழுக்க மலையக சமூகத்தின் தேசிய பொங்கல் நிகழ்வாகும். இந்த சமூகத்தை கெளரவப்படுத்தும் விதமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும்படி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கலாம். ஒரு வகையில் இந்த சமூகத்தை ஜனாதிபதியும் பிரதமரும் எந்தளவுக்கு மதித்துள்ளனர் என்ற விடயமும் இங்கு முக்கியமானதொரு அம்சமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கின்றார். இது நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்கு தெரியும். அப்படியானால் இந்த தேசிய நிகழ்வை ஏன் அவசர அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டும்? ஜனாதிபதி வர மாட்டார் என்பது நன்கு தெரியும். ஏனென்றால் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணமென்பது திடீரென முடிவு செய்யப்படுவது அல்ல. அது திட்டமிட்டதொரு நிகழ்வு. அப்படியிருந்தும் அழைப்பிதழில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகை தருவது சாத்தியமில்லை என்று தெரிந்தும் பிரதமரை இந்நிகழ்வுக்கு அழைத்து வர வேண்டியது ஏற்பாட்டாளர்களின் பிரதான நோக்கமாக இருந்திருத்தல் வேண்டும். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இது ஒரு வகையில் மலையக சமூகத்தை ஏமாற்றும் ஒரு சம்பவமாகவே பேசப்படுகின்றது. நாட்டின் முக்கியமான தலைவர்களை விட தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் இந்நிகழ்வுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்படும் ஒரு தந்திரோபாயமாக இது விளங்குகின்றது. இருநூறு வருடங்களை கடந்தும் எந்தவித அடிப்படை வசதிகளும் உரிமைகளும் அற்று வாழ்ந்து வரும் ஒரு மக்கள் கூட்டத்தினரை ஏதாவதொரு வழியில் ஏமாற்றலாம் என்பதே மலையக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் பிரமாண்டமான ஒரு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டிருந்த அந்த நிகழ்வு தேசிய பொங்கல் நிகழ்வை விஞ்சும் அளவுக்கு இடம்பெற்றது. அட்டனில் தேசிய பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக கிழக்கு மாகாணஆளுநர் செந்தில் தொண்டமான் விளங்குகிறார்.

தனி மனிதராக அவரது பிரதேசத்தில் அவர் முன்னெடுத்த பொங்கல் நிகழ்வை விட இ.தொ.காவின் கோட்டையாக கருதப்படும் நுவரெலியா மாவட்டத்தில் பிரமாண்டமான முறையில் தேசிய பொங்கல் நிகழ்வை நடத்தியிருக்கலாம். ஆனால் அப்படி பேசப்படும் அளவுக்கு தேசிய பொங்கல் விழா இல்லை என்றே கூறலாம். கட்சியின் தலைவராக அவர் விளங்கினாலும் இந்த தேசிய நிகழ்வுக்கு அவரின் ஆலோசனைகள் பெறப்பட்டிருந்ததா என்பது சந்தேகமே. எனினும் அவரும் இதில் கலந்து கொண்டிருந்தார்.  தமிழர்களின் பண்டிகைகள், விழாக்கல் உலகத்தின் எந்த மூலையில் அனுஷ்டிக்கப்பட்டாலும் அந்த பிரதேசத்திலோ அல்லது நாட்டிலோ குறித்த மக்களின் தேசியம் பற்றிய உணர்வுபூர்வமான வெளிப்பாடு நிச்சயமாக இருக்கும்.

இலங்கையில் மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என இருநூறு வருடங்களாக போராடி வருகின்றனர். ஆனால் அட்டனில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் மலையக சமூகத்தினரின் தேசிய உணர்வுகள்  பற்றி எவரும் பேசியிருக்கவில்லை. தமிழர்களின் பாரம்பரிய நடனக் கலைகள் மற்றும் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம், பொங்கல் பொங்குதல் என்பவை வழமையானதொரு நிகழ்வுகளே.

நிகழ்வில் தென்னிந்திய நடிகைகளின் பேச்சை கைதட்டி இரசித்த மலையக சமூகத்தினர் தமது தேசியம், உரிமை, எதிர்காலம் தொடர்பில் எந்தவித உணர்வுகளுமின்றி இருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலும் மேடையில் உரை நிகழ்த்திய எந்த தமிழ் அரசியல்வாதிகளும் மலையக தேசியம், இந்த சமூகத்தின் இருப்பு குறித்து வாய் திறக்கவில்லை. இதுவே இந்த நிகழ்வின் தோல்வியாகப் பார்க்கப்படுகின்றது.

மலையக அரசியல் கட்சிகளின் வழமையான போக்கு இப்படியாகத்தான் உள்ளது. உழைக்கும் வர்க்கத்தினரின் தினமாக அனுஷ்டிக்கப்படும் மே தினங்களில் கூட மேடைகளில் அரசியல் கதைகளும் தமது சுயதம்பட்டங்களும், எதிர்க்கட்சியினரை வசைபாடுதலையும் தான் இந்த அரசியல் பிரமுகர்கள் காலங்காலமாக முன்வைத்து வருகின்றனர். எந்த சந்தர்ப்பத்திலும் மலையக பெருந்தோட்ட சமூகத்தினரின் நிலவுரிமைகள் மற்றும் மலையக சமூகத்தினரின் பாதுகாப்பு, தேசிய அந்தஸ்த்து பற்றி இவர்கள் கதைப்பதில்லை.

அட்டனில் இடம்பெற்ற நிகழ்வில் அரசாங்கத்தின் பக்கமிருக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆற்றியிருந்த உரை மிகவும் நகைப்புக்கிடமாக சுட்டிகாட்டப்படுவதற்குக் காரணம் இது தான்.   கல்வியே எம்மை எப்போதும் காக்கும்,  எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது. எனவே, பிள்ளைகளை தயவுசெய்து பாடசாலைக்கு அனுப்புங்கள், பொருளாதார நெருக்கடி என்பதால் கல்வியை கைவிட்டால் எமக்கு விடிவு பிறக்காது. என்று உரையாற்றியிருந்த அவர் இந்த மக்களை எவ்வாறு பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்பது என்ற விடயம் தெரியாத அரசியல் வாரிசாக இருப்பது வேதனைக்குரியது. மேலும், மத்திய மாகாணத்தில் அதிக மாணவர் இடைவிலகல்களைக் கொண்டிருக்கும் மாவட்டமாக நுவரெலியாவே விளங்குகின்றது. இது குறித்து கடந்த காலங்களில் எந்த மலையக அரசியல் கட்சிகளும் எந்த நடவடிக்கைளையும் மேற்கொண்டிருக்கவில்லை.

மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கவைப்பதற்கான நகர்வுகளில் மற்றுமொரு அங்கமாக தேசிய பொங்கல் விழா பார்க்கப்படுகின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு அறிக்கை விடுத்துள்ளது. மலையகத்தில் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தேசிய பொங்கல் விழாக்கல் இடம்பெற்றுள்ளன. அதில் நாட்டின் தேசிய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இது வரை இந்த மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ளும் முகமாக எந்த அரசாங்கமும் நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்பது முக்கிய விடயம்.

மலையக தேசியம் என்றால் என்னவென்று புரியும் வரை மலையக கட்சிகள் எத்தனை தேசிய நிகழ்வுகளை இந்த மண்ணில் முன்னெடுத்தாலும் அதனால் இந்த மக்களுக்கு ஒன்றும் இடம்பெறப்போவதில்லையென்பது முக்கிய விடயம்.