இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் நான்கு வகை வேட்பாளர்கள்!

301 0

வழமையாக ஒரு தேர்தல் என்றால் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் அக்கட்சியின் வேட்பாளராகி கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவர். இன்று ஷகாலநிலை| அப்படியில்லை. தனித்தொரு கட்சி வேட்பாளராக போட்டியிட எவருக்கும் துணிச்சலில்லை, நம்பிக்கையுமில்லை. எல்லோரும் கூட்டுத் தேடி அலைகிறார்கள், பொது வேட்பாளராக நிற்க விரும்புகிறார்கள்.

1977ம் ஆண்டில் தெரிவான நாடாளுமன்றத்தை 1989 வரை தொடர்வதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற்றார்.

அன்றைய நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை இருந்ததால் அதனை இலகுவாக அவரால் நிறைவேற்ற முடிந்தது. அவ்வாறான அரசியல் பலம் இன்றைய ஜனாதிபதி ரணிலுக்கு இல்லை. எனவே தேவையற்ற விசப்பரீட்சை ஒன்றில் இறங்க அவர் விரும்ப மாட்டார்.

இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தையொட்டி எதிர்க்கட்சிகள் சர்வஜன வாக்கெடுப்பொன்றை ரணில் நடத்த இருப்பதாக பொதுவெளியில் பரப்புரை செய்து வருகின்றனர். இதனை ஐக்கிய தேசிய கட்சியின் உயர்பீடம் அண்மையில் நிராகரித்ததுடன், ரணிலை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கோரியும் உள்ளது.

கட்சியின் அதிகாரபூர்வ தகவல்களின்படி ரணில் இன்னமும் முறைப்படியாக அதற்கு பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் அவர் சுவிட்சர்லாந்துக்கு புறப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

புது வருடம் பிறந்த முதல் வாரத்தில் தமது தேர்தல் பரப்புரையை வடக்கிலிருந்து அவர் ஆரம்பித்திருந்தார். அந்த நான்கு நாட்களும் அவர் அளித்த உறுதிமொழிகளை ஒன்றாகக் கோர்த்துப் பார்த்தால் அதுவே தமிழருக்கான அவரது தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தெரியவரும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்தவாறு தமிழர் பிரச்சனைத் தீர்வு தொடர்பாக அவர் அளித்த வாக்குறுதிகளில் எதனையுமே இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனின் பாணியில் வருடம் முடிவுக்கு முன்னர், சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு என்று கூறி வந்தாரே தவிர செயற்பாட்டில் எல்லாமே பூச்சியம்தான்.

எனவே வடக்கில் நின்றபோது தெரிவித்தபோது எதனையும் ரணில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஜனாதிபதித் தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிடுபவர்கள் தமிழர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குக் கூற வேண்டிய எதனையும் விட்டு வைக்கக் கூடாது என்ற போக்கில் வடக்கில் இவரது உறுதிமொழிகள் இடம்பெற்றன.

ஊகங்களின் அடிப்படையில் எவ்வகையான அனுமானங்கள் வெளியிடப்பட்டு வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலை இ;வ்வருட அக்டோபர் மாதத்துக்கு முன்னர் நடத்த வேண்டியது தவிர்க்க முடியாதது. தொடரும் பல கருத்துக் கணிப்புகள் ஜே.வி.பி. வேட்பாளர் அனுர குமார திசநாயக்கவுக்கு தெற்கில் ஆதரவு அமோகமாகி வருவதாக சுட்டுகின்றன. பொதுவாக கருத்துக் கணிப்புகள் எப்போதும் யார் அதனை நடத்துகின்றனர் என்பதைப் பொறுத்தே அதன் முடிவு அமைவதாக இருக்கும். அதனால் ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தளவில் பெரும்பாலான கணிப்புகளும் ஜே.வி.பி. வேட்பாளருக்கு ஆதரவு அதிகரிக்கிறது என்று கூறுவதால் அதனை புறக்கணிக்க முடியாது.

ஆளும் தரப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தரப்பில் சஜித் பிரேமதாசவும் இத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் வாக்குகள் பிளவுபடும்போது ஜே.வி.பி.க்கான ஆதரவு அதன் வெற்றிக்கு வழி வகுக்குமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இந்த நிலைமையை புரிந்து கொண்டமையினாலேயே தமிழர் வாக்குகளை எவ்வகையிலாவது கொள்வனவு செய்ய வேண்டுமென்ற நோக்குடன் ரணில் திட்டமிட்டு தனது பரப்புரையை வடக்கிலிருந்து ஆரம்பித்தார்.

மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக இயங்கும் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா, நாலக கொடகேவா ஆகியோர் சஜித் அணியில் இணையலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து தம்மைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் பெரமுனவுக்கு ஏற்பட்டுள்ளது.

பெரமுனவின் தலைவர் மகிந்த தங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை. அல்லது தங்கள் ஆதரவு யாருக்கு எனவும் தெரிவிக்கவில்லை. கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா தாமே பெரமுனவின் வேட்பாளர் என்பது போன்று பரப்புரையில் இறங்கியுள்ளார். மகிந்தவின் நெருங்கிய நண்பரான இவர் பெரமுனவின் அரசில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் உட்பட பல பதவிகளில் அமர்த்தப்பட்டவர். 2022ல் தேசிய பட்டியலூடாக பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சராகவும் சில காலம் பதவி வகித்தவர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரா அல்லது பொதுஜன பெரமுன வேட்பாளரா என்ற கேள்வி பல காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கான பதிலை அவர் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. பெரமுனவின் பக்கபலத்துடனேயே ரணில் களமிறங்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை காணப்படுகிறது.

எக்காரணம் கொண்டும் ரணில் தவிர்ந்த இன்னொருவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதில் மகிந்த தரப்பு கரிசனையாக உள்ளது. ரணிலை இன்னொரு தடவை ஜனாதிபதியாக்கி ஆட்சியை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தால், அதன் பின்னர் வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மகன் நாமலுக்கு முடிசூட்டலாமென்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருபவர் மகிந்த.

இவ்வாறான பின்னணியில், சஜித்துடன் ரணில் இணைந்து விடக்கூடாதென்பதில் பெரமுனவினர் மிகுந்த அக்கறையுடன் இருக்கின்றனர். இவர்களுள் அதீத அக்கறை கொண்டவர் எதிர்கால ஜனாதிபதியாகக் கனவு காணும் நாமல் ராஜபக்ச.

இதனை இலக்காகக் கொண்டே மொட்டு (பெரமுனவின் சின்னம்) வேட்பாளராக ரணிலும் களமிறங்கலாம் என்று நாமல் அறிவித்துள்ளார். ரணிலை சஜித் சேர்த்துவிடக்கூடாது என்பதைக் குறியாகக் கொண்ட முன்னறிவிப்பு இது.

நாமலின் இந்த அறிவிப்புக்கு இன்னொரு காரணமும் உண்டு. பெரமுனவின் எம்.பியான நிமால் லான்ஸ தலைமையில் சுமார் இரண்டு டசின் பெரமுன எம்.பிக்கள் ஒரு கூட்டாக இணைந்து ரணிலுக்கு ஆதரவாக மாறிவரும் நிலையில், ரணிலுக்கு எதிராக பெரமுன ஒருவரை போட்டியில் நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்ள முடியாது என்ற யதார்த்தத்தை நாமல் நன்கு புரிந்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ரணில் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையாயினும் அவரது ஐக்கிய தேசிய கட்சி இதனை அறிவித்துவிட்டது. தமது தேர்தல் பணிகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டன என்று ரணிலும் நாடாளுமன்ற வளாகத்தில் சில எம்.பிக்களிடம் நேரடியாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பான சில விபரங்களை கொழும்பு சன்டே ரைம்ஸ் பத்திரிகை கடந்த வாரம் வெளியிட்டது. தமக்கு நெருக்கமான ஒரு குழுவினரை ரணில் தனிமையில் சந்தித்து தேர்தல் பணிகளுக்கான வழித்தடத்தை காட்டியுள்ளார். இவரது மைத்துனரான (மாமன் மகன்) றுவான் விஜேவர்த்தன (இவரே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர்), ஹரின் பெர்னான்டோ, ரவி கருணநாயக்க, மனு~ நாணயக்கார ஆகியோர் இக்கூட்டத்தில் பங்குபற்றினர். கட்சியின் செயலாளரான சாகல ரத்நாயக்க வெளிநாடு சென்றிருந்ததால் பங்கேற்கவில்லை.

அடுத்து இன்னொரு குழுவினரையும் சந்தித்து தேர்தல் பணிகளை விளக்கியுள்ளார். மேலதிகமாக நவின் திசநாயக்க, அகில விராஜ் காரியவாசம், வஜிர அபேவர்த்தன ஆகியோர் இதில் பங்கேற்றனர். திட்டமிடல், கூட்டுத் தொடர்பாடல் உட்பட எட்டுப் பணிகளை இவர்கள் மேற்பார்வை செய்ய வேண்டும்.

ரணிலை வெறுமனே ஒரு கட்சியின் வேட்பாளராக நிறுத்தாமல் மகாகூட்டணியின் (புசயனெ யுடடயைnஉந)  தேசிய வேட்பாளராக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போதுள்ள நிலைவரப்படி வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் நான்கு வகையான வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். பொது வேட்பாளர், தேசிய வேட்பாளர், கட்சி வேட்பாளர், சுயாதீன வேட்பாளர் என இவர்கள் அடையாளம் காணப்படுவர்.

தமிழர் சார்பிலும் ஒருவர் போட்டியிடுவாரென்றால் களம் நிச்சயமாக வித்தியாசமாக மாறும். இதற்காகவாவது, தமிழ்த் தேசிய கட்சிகள்  தற்காலிகமாகவேனும் ஒன்றுபடும் சாத்தியமுண்டா?

பனங்காட்டான்