நிகழ்நிலை காப்புச்சட்ட மூலம் மீதான விவாதத்தை ஒத்திவைத்தல்

80 0

நிகழ்நிலை காப்புச்சட்ட மூலத்தின் மீதான விவாதத்தினை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே தீர்மானம் எடுக்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு நிகழ்ச்சி நிரலிடப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தினை ஒத்திவைக்குமாறு எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து 23, 24ஆம் திகதிகளில் நடைபெறுகின்ற விவாதத்தினை ஒத்திவைக்குமாறு எழுத்துமூலமாக என்னிடத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரல் ஒழுங்குப் பத்திரத்தில் நிரலிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் அதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே தீர்மானிக்க முடியும்.

அதற்கமைவாக  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதியுடன் தற்போதைய பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதியின் வர்த்தமனி அறிவித்தல் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.