தமிழரசின் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும்

51 0

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியானது மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்ற நிலையில் அப்பதவிவை அம்மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற முன்மொழிவைச் செய்வதாக பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத்தெரிவு மற்றும் தேசிய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டக்கிளைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றபோது, பொதுச்செயலாளர் பதவியானது மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளதோடு அதிலேயே மேற்கண்டவாறு முன்மொழிவும் செய்யப்பட்டுள்ளதாக அதில் பங்கேற்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த கூட்டம் மற்றும் முன்மொழிவு சம்பந்தமாக அரியநேத்திரன் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தெரிவு நடைபெறவுள்ளது.

இதன் பின்னரேயே பொதுச்செயலாளர் பற்றிய தெரிவுகள் இடம்பெறுவதே கடந்த கால வரலாறாக உள்ளது.

அதேபோன்று, கட்சியின் தலைமை வடக்கு மாகாணத்திற்கு செல்கின்றபோது கிழக்கு மாகாணத்திற்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவது சம்பிரதாயமாகும்.

அந்த வகையில், இம்முறை பொதுச்செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்படுவதாக இருந்தாலும், அது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அப்பதவி அளிக்கப்படுவதாக இருந்தால் இங்குள்ள சிரேஷ்ட உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் உள்ளதாகவும் பிரசாரம் செய்யப்படுகின்றது.

அதில் எனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலைமைகளும் காணப்படுகின்றன.

ஆகவே, என்னைப் பொறுத்தவரையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அப்பதவி வழங்கப்படுவதாக இருந்தால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் பொருத்தமானவராக இருக்கின்றார். அவருடைய பெயரை நானே முன்மொழிகின்றேன் என்றார்.

இதேவேளை 2019ஆம் ஆண்டு கட்சியின் 16ஆவது வருடாந்த மாநாட்டின் போது புதிய நிருவாகத்தெரிவுக்கான முயற்சியில் அரியநேத்திரன் பொதுச்செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தார்.

எனினும் அம்மாட்டில் கட்சியின் பதவிநிலைகள் அவ்வாறே தொடரப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் குறித்த பதவிக்கான நியமனத்தைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.