மாத்தளை மாநகர சபையில் நிதிமோசடியில் ஈடுபட்ட ஊழியருக்கு விளக்கமறியல்

48 0

மாத்தளை மாநகர சபையில் ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதி மோசடி தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாநரசபையின் ஊழியர் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை மாவட்ட நீதிபதி திருமதி என். ரங்கொத்கே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் , அறியவருவதாவது,

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரையின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன் , அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மத்திய மாகாண பிரதம செயலாளர் குறித்த சந்தேக நபரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த நிதி மோசடி தொடர்பில் மாத்தளை மாநகரசபை பொலிஸாருக்கு வழக்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்த மாத்தளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் வழங்கிய அறிக்கைக்கு அமைய குறித்த ஊழியர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவையும் பெற்றுள்ளனர்.

மாத்தளை மாநகர மயான பகுதியில் சடலங்களை தகனம் செய்வதற்கு அறவிடப்படும் கட்டணம் தொடர்பான பற்றுச்சீட்டுகளை மாற்றியமைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டின் பேரில் முகாமைத்துவ உதவியாளர் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிந்தார்.

குறித்த ஊழியர் மாத்தளை மாநகரசபையில் காசாளராக பணியாற்றிய பின்னர் வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மாத்தளை மாவட்ட சுகாதார சேவை அலுவலகத்திற்கு சென்ற போதே கணக்காய்வு பிரிவினரால் இந்த நிதி மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகேவினது பணிப்புரையின் பேரில், மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி சமித்த பண்டார தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.