பௌத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட “விஷ்வ புத்தி” என்ற தேரர் நீதிமன்ற எச்சரிக்கைகளையும் மீறி தொடர்ந்தும் பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதனால் எதிர்வரும் 24 ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த “விஷ்வ புத்தி” என்ற தேரராவார்.
இவர் டிக்டொக் சமூக ஊடகத்தில் பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் சந்தேக நபர் மீது விசாரணை நடத்த முடியாத பட்சத்தில் குற்றவியல் சட்டத்தின் 290 ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து சந்தேக நபர் தொடர்ந்தும் பௌத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபரின் வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

