கிண்ணியா, சின்னத் தோட்டம் பகுதியில் குவிந்துள்ள குப்பை மேட்டுக்கு வரும் யானை ; அச்சத்தில் குடியிருப்பாளர்கள்!

165 0

கிண்ணியா நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பாரதிபுரம், சின்னத் தோட்டம் பகுதியில் கொட்டுவதனால் அக்கழிவுகளை உண்ண வருகின்ற யானை அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, தம்மையும் தமது தோட்ட பயிர்களையும் அழித்துவிடும் நிலை காணப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்போது அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை பாதுகாப்பு மின்சார வேலி கடந்த சில வருடங்களாக இயங்காததனால் குப்பை மேட்டுக்கு வருகின்ற யானை வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், முன்னதாகவே இந்த யானை வீடுகள் மற்றும் வீட்டுத் தோட்ட பயிர்களை  அழித்துள்ளது. இப்போது மின்சார வேலி இல்லாததால் மீண்டும் தமது குடியிருப்புகளுக்கு யானை பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என மக்கள் கூறுகின்றனர்.

யானையின் அட்டகாசத்தால் தென்னை, வாழை, மரவள்ளி முதலான பயிர்கள் அழிந்துவிடும் அபாய நிலையில் காணப்படுவதாக அச்சம் தெரிவிக்கும் பிரதேச மக்கள், நிலைமையை சீரமைக்கவும் யானையிடமிருந்து தம்மை பாதுகாக்கவும் மின்சார வேலி அமைத்துத் தருமாறு உரிய தரப்பினரிடம் கோரி வருகின்றனர்.