இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டவர் சீதுவையில் கைது

123 0

இரவு நேரங்களில் பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர்  குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.

மேல்மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர் சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் , தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு வீடுகளை உடைத்து 12,000 ரூபா பணமும் 6 பவுண் நகைகளும் , பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையிலிருந்து 4,000 ரூபா பணமும்  இரு ஏ.ரி.எம் அட்டைகளையும் திருடி 646,000 ரூபாவையும் திருடியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளன.

இந்நிலையில் இவருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் 5 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடத்திலிருந்து 65 கிராம் 418 மில்லிகிராம் நிறையுடைய உருக்கிய தங்கங்கள் , 8 பவுண் 440 மில்லிகிராம் நிறையுடைய 2 தங்க மோதிரங்கள், மாணிக்கக் கல் மற்றும் 24 வைரக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.