மக்கள் செலவு செய்தால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நானும் தயார் – குமார வெல்கம

135 0

தேர்தல் பிரசாரத்துக்கு நாட்டு மக்கள் செலவு செய்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நானும் தயார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் தோல்வியடைவார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

நிவாரணம் வழங்கி வாக்குகளை பெறும் காலம் முடிவடைந்து விட்டது என நல லங்கா நிதாஸ் பக்சய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கதாகும்.தேர்தலுக்கு நானும் தயார் என்று பலர் தற்போது களமிறங்கியுள்ளார்கள்.

தொழிலதிபர்களும் களமிறங்கியுள்ளார்கள்.அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவர் ஜனாதிபதியாகினால் எவ்வாறான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு கோட்டபய ராஜபக்ஷ சிறந்த எடுத்துக்காட்டு.

அரச தலைவர் பதவிக்கு கோட்டபய ராஜபக்ஷ தகுதியற்றவர் என்பதை நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.எனது கருத்தை நாட்டு மக்கள் பொருட்படுத்தவில்லை.

2 ஆண்டுகளுக்கு பின்னர் தவறான அரசியல் தீர்மானத்தை உணர்ந்து கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்டியடித்தார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி எனக்கும் உள்ளது.தேர்தல் பிரசாரத்துக்கு நாட்டு மக்கள் செலவு செய்தால் தேர்தலில் போட்டியிட நான் தயார்.இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைவார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.ஆளும் தரப்பால் களமிறக்கப்படும் வேட்பாளர் படுதோல்வியடைவார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிவாரணம் வழங்கி வாக்குகளை பெறும் காலம் முடிவடைந்து விட்டது என்பதை ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.