கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பேயாட்டம்: தலைக்கவசம் அணிந்த நபர் கைது!

363 0

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பிக்குகள் ஓய்வறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யச்  சென்ற ரயில் நிலைய பொலிஸ் அதிகாரிகள் இருவரைக் கடித்ததுடன் ஒருவரின் வோக்கி டோக்கியை பறித்ததாகக் கூறப்படும் தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

காயமடைந்த அதிகாரிகளில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் நிலையப் பொலிஸ் நிலையத்தின் இரண்டு அதிகாரிகளும் கடற்படையின் இரண்டு அதிகாரிகளும் ரயில் நிலையத்தின் பிக்குகள் ஓய்வறைக்கு சென்றபோது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அடையாள அட்டையை கேட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டதுடன் தனது சட்டையைக் கழற்றிவிட்டு ஓட முயன்றதால் அவரைப் பிடிக்க முயன்ற பொலிஸ் அதிகாரியின் வோக்கி டோக்கியை பறித்து தரையில் அடித்தாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரைக் கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் முற்பட்டபோது மணிக்கட்டுக்கு மேல் இரத்தம் வழியும் வரை அதிகாரிகளில் ஒருவரின் கையைக் கடித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர், போக்குவரத்து கடமையிலிருந்த உத்தியோகத்தர் நிலைமையை கட்டுப்படுத்த வந்தபோது,  கண்ணாடி போத்தலால் தாக்கி கையைக் கடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.