ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது!

53 0

ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று  சனிக்கிழமை (13 ) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அப்போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருந்த போராளிகளின் அரசியல் சிந்தனை, அதற்கான அவர்களின் உழைப்பு உயிர் தியாகம் என்பவற்றோடு அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

அவ் வரலாறு ஆவணப்படுத்தப்படுவதோடு அடுத்த சந்ததிகளுக்கு உரிய வகையில் கடத்தப்படவும் வேண்டும். அதுவே சமூக விழிப்பிற்கும், வாழ்வுரிமை போராட்டத்திற்கும் சக்தியாவதோடு அதனை மையமாக வைத்து மக்கள் திரள்வதற்கும் வழிவகுக்கும் .

அந்த வகையில் மலையக தொழிலாளர் வரலாற்றில் 200 வருட வாழ்வோமே போராட்ட வரலாறு தான். இவ் வரலாற்றுக்கு உரியவர்களை நினைவேந்தல் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

மலையக தியாகிகள் நினைவு கூறப்படல் வேண்டும் எனும் பேரார்வம் எழுச்சி கொண்டுள்ள சூழ்நிலையில் தியாகிகளின் வாழ்க்கை வரலாறு, அரசியல் சிந்தனை, அது தொடர்பான அவர்களின் ஈடுபாடு, விடுதலை வேட்கை, காலச் சூழ்நிலை என்பன மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு தியாகிகள் தினம் அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.

இன்றைய மலையக தமிழர்களின் முன்னோர் உழைப்பிற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட போது கடல் பிரயாணத்தில், காடுகள் நிறைந்த பாதையில் நடந்து வருகையில் காட்டு மிருகங்களின் தாக்கத்திற்கும், அரவங்களின் தீண்டுதலுக்கும் உட்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். அதேபோன்று நோய் மற்றும் பட்டினி காரணமாக மரிக்கும் தருவாயில் இருந்தோர் வரும் பாதையிலேயே கைவிடப்பட்டு அனாதரவாக மரித்துள்ளனர்.

மலைப்பாங்கான குளிர் பிரதேசத்தில் காலநிலை தாக்கம் காரணமாகவும் நோயற்ற காலத்தில் முறையான வைத்திய வசதிகள் இன்றியும் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இவையெல்லாம் இயற்கையான மரணம் அல்ல. அன்றைய பிரித்தானிய முதலாளித்துவ ஏற்றுமதி பொருளாதாரம் இவர்களை கொலை செய்தது என்றே கூறல் வேண்டும்.

அத்தோடு பெரும் தோட்டங்களை உருவாக்க காடுகளை அழித்த போது இயற்கையின் சீற்றத்திற்கும் வன விலங்குகளின் தாக்கத்திற்கும் உள்ளாகி மரணத்தை தழுவிய நூற்றுக்கணக்கானோர் கௌரவமான முறையில் அடக்கம் செய்யப்படாது பள்ளங்களில் தள்ளப்பட்டதாகவும், மலைகளில் ஆங்காங்கே புதைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றது.

இவர்களும் கொல்லப்பட்டவளாக கருதுதல் வேண்டும். மலையகத்தின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் தொழிலாளர் வர்க்கத்தின் இரத்தம் தோய்ந்துள்ளதோடு மலையகம் எங்கும் அவர்களின் புதைக்கப்பட்ட உடல்களின் எச்சங்களும் இருக்கின்றன.

தொடர்ந்து நாட்டின் இனவாத அரக்கனும் பல்வேறு காலகட்டங்களில் மலையக மக்களை கொலை செய்திருக்கின்றான். வாழ்வு தேடி வன்னி சென்றோரையும் இனவாதம் விட்டு வைக்கவில்லை. இதனை விட மலையகத்தவர்கள் விடுதலை இயக்கங்களில் போராளிகளாகவும் உயிர் தியாகமாகி உள்ளனர். ஏதோ ஒரு வகையில் இவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்களே.

இந்த வரிசையில் தொழிலாளர்களின் உரிமை, தொழிற்சங்க உரிமை, மொழி உரிமை, நில உரிமை போன்றனவற்றிற்காக நடந்த போராட்டங்களின் போது பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிர் துறந்தவர்களும் உண்டு. அத்தோடு தொழிற்சங்க பகை காரணமாகவும் சகோதர கொலைக்கு உட்பட்டவர்களும் உள்ளனர்.

மலையக தியாகிகளின் வரலாற்றில் தூக்குத் தண்டனைக்கு உட்பட்டு தூக்கு கயிற்றினை மாலையாக ஏற்று தொழிலாளர்களுக்கு ஒளியாகி, வெள்ளைக்கார துரைமாரை உயிர் அச்சம் கொள்ளவும், அன்றைய காலனித்துவ ஆட்சியாளர்களை அச்சத்துக்கு உட்படுத்தவும் வித்திட்ட வேலாயுதம் வீராசாமி இருவரின் தியாக வரலாறு விசேட அடையாளத்தை தமதாக்கிக் கொண்டுள்ளது.

முல்லோய தோட்ட சம்பவத்தை(1940) தொடர்ந்து அனைத்து தோட்ட துறைமார்களும் தொழிற்சங்கங்களின் உருவாக்கத்தை முளையிலேயே அகழ்ந்து அகற்றுவதற்கும், தொழிலாளர் ஒன்று திரண்ட சக்தியாக எழுவதை தடுக்கவும் தடுப்பதற்கும் பல்வேறு ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டப் போது முல்லோயா தோட்டத்திற்கு அண்மையில் ஸ்டெலன் பேர்க் (கந்தலா) தோட்டத் தொழிலாளர் இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தில் சக்தி பெற தொடங்கினர்.

இதனை அறிந்த அத்தோட்ட அதிகாரியான சி.ஏ.ஜி போப் துறை தொழிலாளரை அடக்குவதில் தீவிரம் காட்டியதோடு தொழிற்சங்க நடவடிக்கைகளை தடுக்க அடக்கு முறைகளை கையாண்டார். அதற்கு எதிராக கிளர்ந்த தொழிலாளர்களில் தீவிர சிந்தனை கொண்ட சிலர் மறைமுகத் திட்டம் தீட்டிதுறையின் பிரயாணங்கள் என்பவற்றை உன்னிப்பாக அவதானித்து ஒரு நாள் அவர் அடுத்த தோட்டத்திற்கு இரவு வேளையில் உணவு விருந்துக்கு சென்று திரும்பும் போது வழிமறித்தோரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பத்தோடு தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட வீராசாமி, வேலாயுதம் எனும் இருவர் 1942 பெப்ரவரி மாதம் முறையே 27ம் 28ம் திகதிகளில் தூக்கில் இடப்பட்டனர். இவர்கள் இறுதியாக எழுதிய கடிதத்தில் “உலக தொழிலாளர் வர்க்கம் நீடூழி வாழ வேண்டும்”என நமது வேட்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மலையக மக்களின் வரலாறு முழுவதும் தியாகமே அடங்கியுள்ளது. அந்த வகையில் மலையக தியாகிகள் என அடையாளப்படுத்தப்படுபவருடைய வாழ்க்கை வரலாறு, அவர்களின் போராட்டம், அரசியல் நோக்கம் என்பன மக்களை சென்றடைவதற்கு முறையான வேலை திட்டம் அவசியம். அதுமட்டுமல்ல அவர்கள் தொடர்பான மீள் வாசிப்பும் எழுத்துரு பெற்று மக்கள் மத்தியிலே கொண்டு செல்லப்படலும் வேண்டும்.

அதுவே மலையக சமூக விழிப்பிற்கு வழிவகுக்கும். மலையக தமிழர்கள் இனமாகவும் தொழிலாளர் வர்க்கமாகவும் ஒடுக்கு முறைக்கும் இன அழிப்பிற்கும் உள்ளாகி வரும் சூழ்நிலையில் மலையக மக்களை அரசியல் மையப்படுத்தி அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்வதற்கு சரியான உகந்த நினைவு நாளை தெரிவு செய்து நடத்தப்படுதல் சாலச் சிறந்ததாகும்.