900 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டு சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. பணத்துக்காக அவர் அரசியல் செய்யவில்லை. சேறு பூசல்களுக்காகவே பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற அமர்வின் போது சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய மஹிந்தானந்த அளுத்கமகே அவர் 900 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு பதவி விலகியதாக குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து உரையாற்றுகையில் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசப்பட்டது. சமிந்த விஜயசிறியை நான் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன்.900 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டு அவர் பதவி விலகியதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது.அவர் பணத்துக்காக அரசியல் செய்யவில்லை.
பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் தொடர்பான குழுவின் விசாரணைகளை தொடர்ந்து ஏற்பட்ட அசௌகரியத்தால் அவர் பதவி விலகியதாக அறிய முடிகிறது. சமிந்த விஜேசிறி செல்வந்தர். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் சாதாரண காரில் பாராளுமன்றத்துக்கு வந்தார்கள். தற்போது அதி சொகுசு காரில் செல்கிறார்கள். ஆனால் சமிந்த விஜயசிறி அவ்வாறு இல்லை, ஆரம்பத்தில் எவ்வாறு பாராளுமன்றத்துக்கு வந்தாரோ, அவ்வாறே சென்றுள்ளார்.
சமிந்த விஜயசிறிக்கு அடுத்து பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளவர் இரட்டை குடியுரிமை உள்ளவர் என்று குறிப்பிடப்படுவது பிறிதொரு பொய், அந்த நபருக்கு அவுஸ்ரேலியாவில் நிரந்தர வதிவிடம் உள்ளது. இரட்டை குடியுரிமை இல்லை. அவர் இலங்கை பிரஜை. ஆகவே சேறு பூசல்களுக்காகவே பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்றார்.

