திரணாகம, தெற்கு உடப்புவ, வடக்கு உடப்புவ, நிந்தவூர், சாய்ந்தமருது, மூதூர், வத்தளை, மடிஹ, கொலின்ஜாடிய மற்றும் கொரளவெல்ல ஆகிய கடற்கரைகளை பாதுகாக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக திறைசேரி 623 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2023) 7 கடலோர பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தீவைச் சுற்றி 1,220 மீற்றர் கடற்கரையை பாதுகாக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக திறைசேரி 388 மில்லியன் ரூபாவை ஒதுக்கியதாகவும் அமைச்சர் கூறினார். மொரட்டுவை, களுத்துறை, கலிடோ கடற்கரை, அம்பலாங்கொடை, போருதொட்டை, சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் திருக்கோவில் ஆகிய பகுதிகளில் அந்த கரையோர பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலும், இரணைவில, உப்பாறு, கிரிமுந்தலம், மூதூர், காரைதீவு, நிந்தவூர், புஸ்ஸ, தல்தியவத்தை, கொக்கல, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காத்தான்குடி மற்றும் உஸ்வதகையாவ ஆகிய இடங்களில் 14 அவசரகால கரையோரப் பாதுகாப்பு திட்டப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 1,380 மீற்றர் கரையோரப் பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களமானது 25 சதுப்புநிலத் தாவரங்கள் நடும் வேலைத் திட்டங்களையும், 90 கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.
கரையோர வலயத்துடன் தொடர்புடைய வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், தீவைச் சூழவுள்ள சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை பாதிக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசங்களாக அங்கீகரித்து அறிவிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் கீழ் கிழக்கு பிராந்தியத்தில் அறுகம்பே கரையோரத்தில் உள்ள உல்லை வெளி பள்ளத்தாக்கைச் சூழவுள்ள பிரதேசம் விசேட பாதிப்புக்குள்ளான பிரதேசமாக வன பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து பாதுகாக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தீவைச் சுற்றியுள்ள அழகிய கடற்கரையின் பாதுகாப்பு மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழில்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.
கடற்கரையோரத்தில் ஏற்கனவே 26 சுற்றுலாத் தலங்களைக் கொண்ட இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை மேம்படுத்த நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து பூர்வாங்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. கரையோர சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

