நாட்டிற்கு தேவையான கோதுமை மாவை வழங்கும் இரண்டு முக்கிய நிறுவனங்களான செரண்டிப் ஃப்ளோர் மில்ஸ் (தனியார்) நிறுவனம் மற்றும் ப்ரைமா சிலோன் (தனியார்) நிறுவனம் – ஆறு மாதங்களுக்கு போதுமான கோதுமை தானியத்தை தாங்கள் களஞ்சியப்படுத்தியுள்ளதாகவும் எனவே எதிர்காலத்தில் உடனடி விலையுயர்வு இல்லாமல் விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளன.
செங்கடலில் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து கட்டணத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கோதுமை மா இறக்குமதியாளர்கள் கூறியதை அடுத்து உள்நாட்டில் கோதுமை தானியத்தை இறக்குமதி செய்யும் இரண்டு முக்கிய வழங்குனர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், உள்ளூர் சந்தையில் விநியோகத்தின் பெரும்பகுதிக்கு பொறுப்பான இரண்டு நிறுவனங்களும் சமீபத்திய நெருக்கடியின் போதும் கோதுமை தானியங்கள் மற்றும் கோதுமை மாவை போதுமான அளவு கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறின.
“செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக உலகளாவிய கப்பல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய இடையூறுகள் மற்றும் அதன் விளைவாக சரக்குக் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரிப்பதை ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், இந்த நிறுவனங்கள் அனைத்து இலங்கையர்களுக்கும் உணவுப் பாதுகாப்பையும் கோதுமை மாவின் விலை ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த விரும்புகின்றன.
பொறுப்புள்ள பெருநிறுவன பிரஜைகள் என்ற வகையில், எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புற காரணிகள் செல்வாக்கு செலுத்தும்போதும், இலங்கைக்கான பிரதான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே, எங்களின் வசதியான இடையகங்கள் மற்றும் பயனுள்ள இடர் மேலாண்மை உத்திகள் காரணமாக கோதுமை மாவின் விலையில் மாற்றமிருக்காது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

