‘யுக்திய’ வினால் பாதிக்கப்பட்டோர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

28 0

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டோர் இணைந்து நேற்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்ததுடன், இவ்விடயத்தில் தலையிட்டு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி ஆணைக்குழுவின் தவிசாளரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தன்மை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகள் கூட்டிணைவு மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேற தரப்பினரும் தமது கரிசனைகளை வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் ‘யுக்திய’ செயற்திட்டத்தினால் பல்வேறு வழிகளிலும் அநீதிக்கு முகங்கொடுத்த 32 பேர் இணைந்து திங்கட்கிழமை (8) கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது அவர்கள் ‘நீதிக்கான செயற்திட்டமா? அல்லது அநீதிக்கான செயற்திட்டமா?’, ‘உண்மையான சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்’ என்பன உள்ளடங்கலாக ‘யுக்திய’ செயற்திட்டத்தை கேள்விக்குட்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அதுமாத்திரமன்றி கவனயீர்ப்புப்போராட்டத்தின் முடிவில் அவர்கள் ‘யுக்திய செயற்திட்டத்தின் ஊடாக சட்டம் தவறாகப் பிரயோகிக்கப்படுவதை தடுத்துநிறுத்துவதற்குத் தலையீடு செய்யுங்கள்’ என வலியுறுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளருக்குப் பெயரிடப்பட்ட மகஜரொன்றையும் அதிகாரிகளிடம் கையளித்தனர். அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

சட்டத்தின் ஆட்சி இல்லாவிடின், அந்நாட்டுப்பிரஜையின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. அதன்படி இலங்கைப்பிரஜைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நீங்கள் உடனடியாகத் தலையீடு செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இக்கடிதத்தை எழுதியிருக்கின்றோம்.

தற்போது இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ நடவடிக்கையின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டம் பின்பற்றப்படாமையினை அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை முற்றுமுழுதாகப் புறக்கணித்து செயற்படுவது மிகவும் துரதிஷ்டவசமான விடயம் என்பதுடன், இதன்விளைவாக நாட்டின் சட்டக்கட்டமைப்பு புறந்தள்ளப்படுகின்றது.

எனவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்கீழ் இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ நடவடிக்கை குறித்து கண்காணிக்குமாறும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடியவகையில் இந்நடவடிக்கைகயில் ஈடுபடுவதற்கு அவசியமான ஆலோசனைகளை பொலிஸாருக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.