கடலூர் மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய கனமழை பெய்தது. இதில் சிதம்பரத்தில் அதிகபட்சமாக 22 சென்டி மீட்டர் மழை பதிவானது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. கனமழையின் காரணமாக அறுடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்ச அலர்ட் விடுத்திருந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.07) இரவு முதல் கடலூர், சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், அண்ணாமலை நகர், சேத்தியாத்தோப்பு, வேப்பூர், தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான குடியிருப்பு பகுதிகிளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் தண்ணீர் ஆறுபோல ஓடியது. இன்று(ஜன.08)காலை நிலவரப்படி அதிகபட்சமாக சிதம்பரத்தில் 22 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் ராணுவ ஆள்சேர்ப்பு தற்காலிக கூடாரம் சரிந்து விழுந்தது. அதேபோல், சிதம்பரம் கொத்தங்குடி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று(ஜன.8) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இன்று (ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிங்காரவேல் அறிவித்துள்ளார். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம் பகுதியில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சாய்ந்துள்ளன. வயல்களில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளது. குறிஞ்சிப்பாடி பகுதியிலும் நெல் பயிர் சாய்ந்து வயலில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகன் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதராமான வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் செங்கால் ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரிக்கு விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் வடவாற்றில் தண்ணீர் அனுப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 47.50 அடி முழு கொள்ளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது வீராணம் ஏரி 42.90 அடி தண்ணீர் உள்ளது. சம்பா சாகுபடியை மிகவும் தாமதமாக செய்த புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதி சம்பா நெல் பயிருக்கு இந்த மழை தேவையாக இருந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய(ஜன.08) மழையளவு சிதம்பரத்தில் 228.8 மிமீ, புவனகிரியில் 189 மிமீ, சேத்தியாத்தோப்பில் 155 மிமீ, அண்ணாமலைநகர் 147.8 மிமீ, காட்டுமன்னார்கோவிலில் 143 மிமீ, கடலூரில் 136 மிமீ, பரங்கிப்பேட்டையில் 98.6 மிமீ, குறிஞ்சிப்பாடியில் 98 மிமீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 92.2 மிமீ, பண்ருட்டியில் 60 மிமீ, விருத்தாசலத்தில் 52 மிமீ, வேப்பூரில் 37 மிமீ, லக்கூரியில் 31 மிமீ, தொழுதூரில் 25 மிமீ மழை பெய்துள்ளது. சிதம்பரம் பகுதியில் 22 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் பெரிய பாதிப்புகள் இல்லை. இப்பகுதியில் பெரிய பாசன மற்றும் பெரிய வடிகால் வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்கள் கடைமடை வரை தூர் வாரப்பட்டால் தண்ணீர் விரைவாக வடிந்து வருகிறது.

