மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மகஜரைக் கையளிக்க முடியாத நிலை!

25 0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளடங்கலாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றை கையளிக்க முயற்சித்த போதும் மகஜர் கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில்  இன்று (8) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் கலந்து கொண்டிருந்தோம்.கடல் தொழில் சார்பாக கலந்துரையாட நீண்ட நேரம் ஒதுக்கி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.எனினும் கலந்துரையாடல் தொடர்பான நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டிருந்தது.

இதனால் எமது கோரிக்கைகளை முன்வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜனாதிபதியிடம் முன்வைக்க முனைந்த கோரிக்கைகளை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வருகிறோம்.

1. இந்திய இழுவைப் படகுகள் தொடர்பாக 

ஆயிரக் கணக்கான இந்திய இழுவைப்படகுகள் எமது வாழ்வாதாரம் அடியோடு அற்றுப் போகும் படியாக எமது கரைக்கு மிக அருகாமையில் (சுமார் 500 மீட்டர் தொலைவில்) வந்து மீன்பிடி நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றன.

இதனால் எமது தொழில் வெகுவாகப் பாதிக்கப்படுவதோடு கடல் வளம் அறவே அற்றுப் போய் விடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே 2016 ஆம் ஆண்டு டில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு மட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்துவதே இதற்கு தீர்வாக அமையும்.

2.இல்மனைட் மண் அகழ்வு

மன்னார் தீவில்  இல்மனைட் மண் அகழ்வானது  மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியாமல் இடம்பெறுவது பாரதூரமான தொன்றாகும். குறித்த அத்திட்டம் முன்னெடுக்கப்படுமாயின் மன்னார் தீவில் வாழுகின்ற மீனவர்கள் தங்கள் வாழிடங்களை இழந்து இப்பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றும் என்பது உறுதியாகும்.

3.சட்டவிரோத மீன்பிடி முறைகளை முற்றாக நிறுத்துவதற்கு அதிகாரிகளை பணித்தல்

மாவட்டத்தில் இச்சடட்விரோதமீன்பிடியானது இந்திய மீனவர்களின் வருகையை காரணம் காட்டி எமது மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே அதனை முற்றாக நிறுத்துவதற்கு அதிகாரிகளுக்கு பணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 4.காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்

காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். இருப்பினும் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிற கடற்கரைப் பகுதிகளுக்கு மிக அண்மையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை கோபுரங்களினால் மீன்பிடி வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.

காற்றாடியானது மீன்பரம்பல் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக எவ்விதமான விஞ்ஞான ஆதாரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லையாயினும் காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் மீன்பிடி வெகுவாக நலிவடைந்துள்ளதாக   மீனவர்கள் தங்கள் அனுபவரீயில் கூறி நிற்கின்றனர்.

இது தொடர்பாக விரிவுரையாளர்கள் குழாமொன்று மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு, கடல் நீர் ஓடைகள் (கண்டல் தாவரங்கள்) சிதைக்கப்பட்டதும் கடற்கரையோரமாக பாதை அமைக்கப்பட்டதும் மீன்களின் பெருக்கத்தினை பாதித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் அதை விட புதிய 100 காற்றாலை கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் வாழ்விடங்களும் சிதைக்கப்படும் அவல நிலை தோன்றியுள்ளது.எனவே தீவுப் பகுதியை தவிர்த்து இத்திட்டத்தை செயல்படுத்துமாறு மீனவ சமூகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

5.இழந்த மீன்பிடி உபகரணங்களுக்கான நஷ்டஈடு

எமது மாவட்டத்தில் மீனவர்கள் இயற்கை சீற்றங்களினால், இந்திய இழுவைப் படகுகளினாலும் தமது மீன்பிடி உபகரணங்களை இழந்து விடுகின்ற பல சந்தர்ப்பங்கள் தொடர்ந்து ஏற்படுவது  வாடிக்கையானதொன்றாகும்.

இருப்பினும் மேற்படி பாதிப்புக்குள்ளாகும் ஏழை மீனவர்களுக்கு எவ்வித நஷ்ட ஈடுகள் வழங்கப்படுவதில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. எனவே இம் மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கிப்போய் விடாது அவர்களுக்கு இழப்பீடானது உரிய காலத்தில் வழங்கப்படுதல் நன்மை பயக்கும்.

6. இறால், மற்றும் அட்டைப் பண்ணைகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தீங்கு

எமது மாவட்டம்தோறும் ஆங்காங்கே பரவலாக அட்டைப் பண்ணைகளும் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருதல் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது.

அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவு நீரால் சுற்றுச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. அந்நீரை அருந்துகின்ற கால்நடைகளும் இறந்து வருகின்றன. மேலும் அந் நீர் கலக்கின்ற இடங்களில் மீன்கள் தொகையாக செத்து மடிவது கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது.

எனவே தற்போது எமது மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை தங்கள் மேலான சமூகத்திற்குத் தெரிவித்து நிற்க்கின்றோம். தாங்கள் அது விடயங்களைக் கண்ணுற்று எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான உரிய   தீர்வுகளை  பெற்றுத்தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.