வவுனியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து எமது நியாயத்தை கேட்டிருக்க வேண்டும் – மனுவல் உதயச்சந்திரா

41 0
காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக  போராடி வருகிறோம். இந்நிலையில், வவுனியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை  சந்தித்து எமது தரப்பு நியாயத்தை கேட்டிருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக  போராடி வருகிறோம். இந்நிலையில் வவுனியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை  சந்தித்து எமது தரப்பு நியாயத்தை கேட்டிருக்க வேண்டும்.

வவுனியாவிற்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு சென்ற வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின்   சங்க தலைவி ஜெனிற்றா பொலிஸாரால் பல வந்தமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வவுனியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி  அவர்களை சந்திப்பதற்கு ஜெனிற்றா  சென்றுள்ளார். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அல்ல. ஜனாதிபதியை சந்தித்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியை கேட்பதற்காகவே அங்கு சென்றார். ஆனால், பொலிசார் அங்கு நின்ற பெண்களுடன் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட விதத்தை ஏற்க முடியாது.

நாங்கள் எமது உறவுகளின் நீதிக்காகவே 14 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறோம்.

இது உலக நாடுகளுக்கு காட்டுவதற்கான கண்துடைப்பு. இதன் மூலம் அவர் வட மாகாணத்துக்கு சென்று தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடினேன். அங்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று உலகை நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு தந்திர செயலே ஜனாதிபதி வவுனியாவிற்கு வருகை தந்தது.

சம்பவத்தில் பொதுமக்களிடம் ஆண் பெண் பொலிஸார் அத்துமீறி நடந்துகொண்ட விதம் கண்டனத்துக்குரியது.  உலக நாடுகள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

நாங்கள் இலங்கை அரசை நம்பவில்லை என்று தான் உலக நாடுகளிடம் நீதி கேட்டு நிற்கின்றோம்.  உலக நாடுகள் எமது  கோரிக்கை யை நிறைவு செய்து தர வேண்டும் என்பதுடன்   பலாத்காரமாக கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா மாவட்ட சங்கத் தலைவி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.