அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெறும் சிறந்தகாளை, சிறந்த வீரருக்கு கார் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும்,காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்க நாணயம், பைக் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, பாலமேடு, அலங்காநல்லூர் உட்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள், மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் போட்டி நடைபெறும் இடத்தில் நிரந்தர வாடிவாசல், கேலரி வசதி கிடையாது என்பதால், அவற்றைப் புதிதாக அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
பார்வையாளர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் புகாமல் இருப்பதற்காக, கேலரி அருகே மரத்தடுப்புகள் அமைத்தல், மாடுகள் உள்ளே மற்றும் வெளியே வந்து செல்லும் இடங்கள், முக்கியபிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடம், அவசரகால வழி போன்றவை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
50 ஆயிரம் பார்வையாளர்கள்: மேலும், மருத்துவ முகாம், மின்விளக்கு வசதி, ஜெனரேட்டர் வசதி, பாதுகாப்பு வசதி, ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை மையம் ஆகிய ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்ல வாய்ப்பு உள்ளதால், அவர்களுக்கான குடிநீர், நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்வதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன.
கடந்த காலங்களில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டும் சிறந்த காளை, வீரருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டன. அதன்பிறகு பாலமேடுஜல்லிக்கட்டிலும், கடந்த ஆண்டுமுதல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் கார் பரிசு வழங்கும் நடைமுறை தொடங்கியது.
அதேபோல, இந்த ஆண்டு சிறந்த வீரர், காளைக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.மேலும், பங்கேற்கும் ஒவ்வொரு காளைக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தங்க நாணயம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், காவல்ஆணையர் லோகநாதன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
நாட்டு இன காளை பரிசு: இதுகுறித்து மேயர் இந்திராணி கூறும்போது, ‘‘நாட்டு இன மாடுகளை மீட்டெடுக்கவும், நமது பாரம்பரியத்தையும், வீரத்தையும் பாதுகாக்கவுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், அடுத்த தலைமுறையினரும் நாட்டு இன காளைகளை வளர்க்க, கன்றுடன் கூடிய நாட்டு இனப் பசுக்களை பரிசாக வழங்குகிறேன். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார் மற்றும் பிறபரிசுகள் வழங்குவது ஒருபுறம்இருந்தாலும், சிறந்த காளையின்உரிமையாளர் மற்றும் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்படுவோருக்கு கன்றுடன் கூடிய பசுக்கள் வழங்கப்படும்” என்றார்.

