சுயாதீன தரப்பினர்களில் பெரும்பாலானோர் எம்முடன் இணைவார்கள்

39 0

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும்,மக்களால் ஏற்றுக் கொள்ளும் நபரை  ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுபவர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவார்கள் என  ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (5) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்.நாடளாவிய ரீதியில் வெகுவிரைவில் அரசியல் கூட்டங்களை நடத்துவோம்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் பொது கூட்டங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என்று ஆளும் தரப்பின் ஒருசிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சகல தரப்பினருடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீரவு காணும் வகையில் மக்களால் ஏற்றுக் கொள்ளும் நபரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.

ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கூட்டணிகள் தற்போது தோற்றுவிக்கப்படுகின்றன.கட்சி தாவல்களும் இடம்பெறுகின்றன.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மை காணப்பட்டது. கட்சி தாவல் என்பது இங்கு இயல்பானதாக உள்ளது.கட்சி என்ற ரீதியில் பலமாக உள்ளோம்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது கூட்டணியாக இணைந்துள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த காலங்களில் சகல அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகித்துள்ளார்.பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பலர் எம்முடன் இணைவார்கள் என்றார்.