செங்கடலிற்கு கப்பலை அனுப்புவதா ?

127 0
image
செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான அமெரிக்கா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில்  இலங்கை கடற்படையினரும் இணைத்துக்கொள்வதுகுறித்து இலங்கை கடற்படை ஆராய்ந்து வருகின்றது.

ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் பகுதிக்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்புவதற்கு முன்னர் அது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இலங்கையும் இணைந்து கொள்ளக்கூடும் என மூன்றாம்திகதி  ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

செங்கடலில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களிற்கு எதிரான சர்வதேச படையணியில் இணைந்துகொள்ளுமாறு  அமெரிக்கா விடு;த்த வேண்டுகோள்களை  பல உலகநாடுகள் நிராகரித்துள்ளன.

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை தொடர்ந்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலின் கப்பல்கள் உட்பட கப்பல்களை தாக்கிவருகின்றனர்.

ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு கப்பல்களை வழங்குமாறு இலங்கை உட்பட 20 நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

செங்கடலிற்கு இலங்கை கடற்படை கப்பலை அனுப்பினால் அதற்காக பெருந்தொகையை செலவிடவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள தொடர்புபட்ட வட்டாரங்கள் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையையும் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளன.