கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தல் : 2023 இல் 715 கிலோ ஹெரோயின், 3711 கிலோ கேரள கஞ்சா மீட்பு

122 0

இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 343 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 715 கிலோ ஹெரோயின், 3711 கிலோ கேரள கஞ்சா, 50 கிலோ உள்நாட்டு கஞ்சா, 140 கிலோ அஷீஸ், 11 கிலோ ஐஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு 92 572 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 18 உள்நாட்டு மீன்பிடி படகுகளுடன் 187 சந்தேக நபர்களும், ஈரான் படகுடன் 5 ஈரான் பிரஜைகளும், பாக்கிஸ்தான் பிரஜைகள் மூவரும், இரு இந்திய படகுகளுடன் 6 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த 191 மதுபான போத்தல்களுடன் 8 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 41,380 சிகரட்டுக்களும், 1,016,755 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு, 2642 மதன மோதகம் எனப்படும் போதை வில்லைகளுடன் 42 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

மேலும், 11 கஜமுத்துக்கள் மற்றும் சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படவிருந்த 14 கிலோ கிராம் தங்கம் என்பவற்றுடன் 3 உள்நாட்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவற்றுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று கடந்த ஆண்டு சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்படவிருந்த 36,910 கிலோ பீடி தொகையும், 878 கிலோ புகையிலைத் தூளும், 990 கிலோவுக்கும் அதிக மஞ்சளும், 4722 இரசாயன விவசாய திரவியங்களும், 12,907 பக்கட்டுக்களும், 45,418 அழகு சாதன பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 60 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவை தவிர ஆட்கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களும், சட்ட விரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட 9 பேரும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வர முற்பட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.