கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான பொது சொத்துகள் சேதமடைந்தன. இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீகாந்த் பூஜாரி (56) என்பவரை கர்நாடக போலீஸார் நேற்று முன்தினம் ஹுப்ளியில் கைது செய்தனர். இவர் அயோத்தியில் மசூதி இடிப்பு சம்பவத்தில் பங்கேற்றதுடன், ஹுப்ளியில் நடந்த கலவரத்திலும் பங்கேற்றதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ராமர் கோயில் திறக்கப்பட இருக்கும் நிலையில், இந்த கைது நடவடிக்கை கர்நாடகாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஸ்ரீகாந்த் பூஜாரியின் கைதை கண்டித்து பெங்களூருவில் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் அசோகா பேசுகையில், ‘‘31 ஆண்டுகளுக்கு பின் பாஜகவை சேர்ந்தவரை கைது செய்ததன் மூலம் காங்கிரஸ் அரசு பாஜகவினரை பயங்கரவாதியாக காட்ட முயற்சிக்கிறது. பாபர் மசூதி இடிப்பின்போது நானும் எடியூரப்பாவும் கூட அயோத்தியில் பங்கேற்றோம். எங்களை கைது செய்வதற்கு சித்தராமையாவுக்கு துணிச்சல் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முதல்வர் சித்தராமையா, ‘‘பாஜகவினருக்கு சட்டம்தெரியாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் குற்றம் குற்றம்தான். பழைய வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளதை அரசியலாக்கி வரும் பாஜகவினரை மக்களும் ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

