ஒருவருட காலத்திற்கு சீனாவின் ஆராய்ச்சி கப்பல்களிற்கு அனுமதியில்லை

23 0

ஒருவருட காலத்திற்கு சீனாவின் ஆராய்ச்சி  கப்பல்கள்  தனது துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் துறைமுகத்திற்குள்ளும்   விசேட பொருளாதார வலயத்திற்குள்ளும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் நுழைவதற்கு அனுமதிவழங்கப்போவதில்லை என கொழும்பு புதுடில்லியிடம் தெரிவித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக  இந்தியாவிற்கு இலங்கை தகவலை தெரிவித்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என  இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனவரி ஐந்தாம் திகதி முதல் மே மாதம் வரை தென் இந்து சமுத்திர பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு சீனாவின் ஜியாங் யாங் கொங்3 ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அனுமதி வழங்காது என்பதே அர்த்தம் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைதீவின் கரையோர பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட கப்பலிற்கு அனுமதியளிக்கவேண்டும் என மாலைதீவு அரசாங்கத்திடம் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனா சார்பு அரசாங்கம் மாலைதீவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்து சமுத்திரத்திற்குள் சீனாவின் விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல்கள் ஏவுகணை கண்காணிப்பு கப்பல்களை அனுமதிப்பதுஅவற்றிற்கு துறைமுகங்களில் இடமளிப்பது குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கொழும்பிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளதை தொடர்ந்தே கடந்த வாரம் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் ஒரு வருட தடை குறித்து  இந்தியாவிற்கு அறிவித்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.