கிண்ணியா, உப்பாறில் உள்ள கிராமங்களும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கின

109 0

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராமசேவகர் பிரிவிலுள்ள சில கிராமங்களின் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அவ்வீதிகளின் ஊடான தரைவழிப் போக்குவரத்து நேற்று (29) இரவு முதல் தடைப்பட்டுள்ளது.

போக்குவரத்து தடைப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

சோளவெட்டுவான், காரவெட்டுவான், தகரவெட்டுவான், மயிலப்பன் சேனை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வீதிகளே  வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

கனமழையினாலும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள், மன்னம்பிட்டிய பகுதியில் உள்ள வான் கதவுகள் திறக்கப்பட்டதால் மகாவலி கங்கையின் நீரேந்து பகுதியின் விளைவினால் குறித்த பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பிரதேச வாழ் மக்கள் வல்லத்தின் ஊடாக பயணம் செய்து, தங்கள் கிராமங்களை சென்றடைகின்றனர்.

குறித்த வீதிகளை தவிர மாற்று வீதிகள் இல்லாததால் வெள்ள நீரை கடந்தே செல்ல வேண்டியுள்ள நிலையில் மக்கள் உள்ளனர்.

வெள்ள அனர்த்தத்துக்கு முகங்கொடுத்து வரும் மக்கள், தங்கள் அன்றாட இயல்பு நிலை மட்டுமன்றி, தங்களின் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரமாக தோட்ட பயிர்ச் செய்கை காணப்படுகிறது.

மேலும், பிரதேசவாசிகள், அன்றாடம் கூலித் தொழிலை செய்து வரும் தாங்கள், வெள்ள நீர் நிரம்பிய இந்நாட்களில் பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, வருடாவருடம் இதுபோன்று வெள்ள நீர் அனர்த்தத்தால் தாம் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வதால், நிரந்தர தீர்வாக வெள்ள நீரில் மூழ்காத வீதிகளை புனரமைத்து தருமாறும் உரிய தரப்பினருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.