சட்டவிரோதமாக பாகிஸ்தானில் வசித்த 2 இந்தியர்கள் கைது

321 0

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசித்து வந்த இரண்டு இந்தியர்களை, அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு கடைசியாக நாடு தழுவிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அன்றைய நிலவரப்படி, 18 கோடி மக்கள் அங்கு வாழ்வதாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர், ராணுவ ஆட்சி, ஜனநாயக ஆட்சி என்று மாறிமாறி அமைந்ததால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 19 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

தற்போது அரசு உத்தரவின்பேரில் 6-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது. மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரையிலும், ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி மே 25 வரையிலும் அங்கு நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்காக 185 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் அரசுப் பணியாளர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 918 பேரும், இவர்களுக்குத் துணையாக 2 லட்சம் ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்து வந்த இரண்டு இந்தியர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.

தேசிய அளவிலான கணக்கெடுப்பின்போது இந்தியர்கள் இருவர் சட்டவிரோதமாக கராச்சி நகரத்தில் வசித்து வந்ததை கணக்கெடுக்கும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து கணக்கெடுப்பு அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி அவர்கள் இருவரையும் பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களின் பெயர் ஹசன் அஹமது, வாசிம் ஹசன் என்பதும் அவர்கள் இருவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் சட்டவிரோதமாக கராச்சியில் வசித்து வந்ததாக கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.