பெப்ரவரி மாதம் இலங்கை வருகிறார் தாய்லாந்து பிரதமர்

46 0

தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவிஸின் எதிர்வரும் 2024 பெப்ரவரி மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவிருப்பதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவுள்ளார்.

இலங்கை – தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கடந்த 18 – 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியை அடுத்தே இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்றின் விளைவாக சுமார் 4 வருடகாலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த நவம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்பட்டன. இப்பேச்சுவார்த்தைகளின்போது வர்த்தகம் சார்ந்த நிபந்தனைகள், சேவை வழங்கல்கள், முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு என்பன தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின்கீழ் இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவிஸின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.