நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள்

54 0

விவசாய நிலங்களில் களைகளாக விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் தாவரங்கள் பலவுண்டு.

நந்திக்கடலில் நீர்வாங்கு பகுதிகளில் வளர்ந்து வெள்ளத்தோடு வயல் நிலங்களில் செல்லும் வேலன்பாசியினால் இரட்டிப்புச் செலவாகின்றதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

நீரில் நன்கு வளரும் வேலன்பாசி சல்வீனியா எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயத்நில் இது ஒரு நீர்க்களை.சிலாவத்தை, முல்லைத்தீவு,வற்றப்பளை வயல்களில் பெரியளவிலான தாக்கத்தினை சல்வீனியா வருடந்தோறும் ஏற்படுத்தி வருகின்றது.

யாவரும் இதனை பொருட்படுத்தாமல் செல்வது ஆச்சரியமானதாக இருக்கின்றது.

மழைகாலங்களில் விரைவாக பெருக்கமடைந்து கொள்ளும் இது வெள்ளத்தோடு வயல்களுக்குள் வருகின்றது.

நெல் பயிர்களிடையே வளர்ந்து பரவுகின்றது. இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறையும் நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றது.

நந்திக்கடலின் நீர்வாங்கு பகுதிகளில் அதிகமாகவும் முல்லைத்தீவு நகரப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் தேங்கி இருக்கும் நீரிலும் சல்வீனியா இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது என முல்லைத்தீவு விவசாயிகள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

மழை அதிகமாகும் போது நீர் வரத்து அதிகரிக்கும்.சல்வீனியாவைக் கொண்ட நீர்த் தேக்கத்தில் நீரின் மட்டம் உயரும். இதனால் அந்த நீர் வயல்களுக்குள் பரவிக் கொள்ளும்.

நீரில் மிதந்து வளரும் களையான சல்வீனியாவும் பரவி வயல்களில் பயிர்களை பாதிக்கின்றது. பாதிப்பின் அளவு உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது இருப்பதால் அது இயல்பானதாகிவிட்டது.

எனினும் மெல்ல மெல்ல அதன் தாக்கம் விளைச்சலை பாதிக்கும் என அதன் தாக்கத்தால் பாதிப்படைந்த விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.

வயலுக்குள் சேர்ந்துள்ள சல்வீனியாவை வக்கடைகளை வெட்டிவிட்டு வயலில் உள்ள நீரை வெளியேற்றுவதன் மூலம் வெளியேற்ற முடியாது.

ஒரு சல்வீனியா இருந்தாலும் கூட அது விரைவாக வளர்ந்து பரவுகின்றது. அதனால் வேலையாட்கள் மூலமே அவற்றை அள்ளி அகற்ற வேண்டி இருக்கின்றது.

இது மேலதிகமாக செலவை ஏற்படுத்தி விடுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார். நீர்க்களைகளின் தாக்கம் குறித்த தெளிவின்மை பல விவசாயிகளிடம் இருப்பதையும் அவர்களுடன் உரையாடிய போது தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு சிலரே தெளிவோடு தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

நந்திக்கடலில் முல்லைத்தீவு நகரத்தை ஒட்டியதாக அமைக்கப்பட்ட நீர் தடுப்பணையினால் நந்திக்கடலினை அடையும் நீர் வயல்களுக்குள் பரவி சல்வீனியா பரவுவதை தடுக்க முடிகிறது.

எனினும் இது முழுமையான தீர்வாக அமையவில்லை. இந்தப் பகுதி நீர்நிலைகளில் உள்ள சல்வீனியா அழிக்கப்பட வேண்டும்.

அப்போது தான் அவை வயல்களுக்குள் வருவது தடுக்கப்படும். இது ஒன்று தான் நிரந்தரமான தீர்வாக அமையும். எனினும் இது செலவு கூடிய ஒரு முயற்சி.ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியம்.

இதனோடு தொடர்புடைய நிறுவனங்கள் கவனம் எடுத்தால் விவசாயிகளுக்கு இலகுவாக இருக்கும் என சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மழையினால் சேரும் நீர் கடலுக்கு செல்லும் பாதையில் உள்ள வயல்களுக்கு அதிக பாதிப்பை சல்வீனியா வருடந்தோறும் ஏற்படுத்தி வருகின்றது.

நீரேந்து பகுதிகளில் உள்ள தாழ்நிலங்களில் வருடம் முழுவதும் தேங்கி இருக்கும் நீரில் இவை வளர்ந்துள்ளன.

நந்திக்கடலில் மஞ்சள் பாலத்திற்கு கீழ் உள்ள நீரில் சல்வீனியா அதிகளவில் இருப்பதை குறிப்பிடலாம்.

மழை நீரின் வரத்து அதிகரிக்கும்போது இந்த சல்வீனியாவும் பரவலடைந்து வயல்களுக்குள் செல்கின்றது.

இந்த நீர் வயல்களுக்குள் செல்லாதவாறு தடுப்பணை இருந்தாலோ அல்லது வயல் வேலிகளில் கம்பி வலை, சிறு கண் ஊசிவலைகளையோ தடுப்பாக பயன்படுத்தினால் சல்வீனியா உள்வருவதை குறைக்கலாம் என தன் கருத்துக்களையும் விவசாய பாட ஆசிரியராக கடமையாற்றி வரும் விவசாயி ஒருவர் குறிப்பிட்டமையும் இங்கே நோக்கத்தக்கது.

தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட தாவரம் சல்வினியா.ஏனைய இடங்களிலும் இது பரந்துள்ளது.

வெப்பமண்டல நீர்வாழ் தாவரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனைய இடங்களில் இது ஒரு ஆக்கிரமிப்பு தாவரமாக இனம் காணப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா, மெக்சிகோ, மேற்கிந்தியத் தீவுகள், ஆபிரிக்கா, யூரேசியா, தென் அமெரிக்க நாடுகள், மத்திய அமெரிக்கா, மடகாஸ்கர்,தென்போர்னியோ ஆசியாவின் பல பகுதிகளில் இன்று சல்வீனியா பரந்துள்ளமையை அவதானிக்கலாம் என தாவரவியல் கற்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளதும் நோக்கத்தக்கது.

சல்வினியேசி குடும்பத்தில் சால்வினியா இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இலங்கையின் வடபுலத்தில் இது சல்வீனியா,வேலன்பாசி எனவும் அழைக்கப்படுகிறது. “Salvinia natans.L. All ” என்ற விஞ்ஞானப் பெயரைக் கொண்டுள்ளது.

அன்டன் மரியா சால்வினி என்ற இத்தாலிய நாட்டு விஞ்ஞானியின் நினைவாக சால்வினியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கி.பி.1754 ஆம் ஆண்டில் ஜீன் பிரான்கோயிஸ் சேகுயரால் அறிக்கையிடப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தாவரமாகும்.

பொதுவாக வட்டர்மாஸ் என அழைக்கப்படும் இதனை உயிரில் முறையிலும் இரசாய களைக்கொல்லிகளைப் பயன்படுத்தியும் அழிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.