அமெரிக்காவில் தனது சகோதரியை சுட்டுக்கொன்ற சிறுவன்

141 0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், கிறிஸ்மஸ் தின பரிசுக்காக தனது உடன்பிறந்த சகோதரியை 14 வயதுடைய சிறுவன் சுட்டுக் கொன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கிறிஸ்மஸ் பரிசுகள் யாருக்கு அதிகம் என்ற வாக்குவாதம் 14,15 வயதுடைய இரு சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வாக்குவாதம் தொடர்ந்தும் இடம்பெற்றதையடுத்து 14 வயதுடைய சிறுவன் ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கியை எடுத்து அதை தன் சகோதரனை நோக்கி, அவனை தலையில் சுடப் போவதாகக் கூறியுள்ளார்.

இதைக்கண்ட அவரது மூத்த சகோதரி, தான் சண்டையிட விரும்பவில்லை என்றும், தனது சகோதரனை வீட்டை விட்டு வெளியேறுமாறும் கூறியுள்ளார்.

ஆனால், அதை ஏற்காத 14 வயது சிறுவன் தனது சகோதரி மார்பில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பின்னர் துப்பாக்கியை அருகில் இருந்த முற்றத்தில் வீசிவிட்டு ஓடியுள்ளார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட இளம்பெண்ணை அவர்களது குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த துப்பாக்கி சூட்டில் 14வயது சிறுவனின் சகோதரி உயிரிழந்த நிலையில், அவர் கையில் வைத்திருந்த குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமான 14 வயதுடைய சிறுவன் மீது முதல்நிலை கொலை, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.