சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பம்!

149 0

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்று அதிகாலை பெல்மதுளை கல்பொத்தவல ஸ்ரீ பாத விகாரையில் இருந்து புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகள் என்பன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அத்துடன், நல்லத்தண்ணி மற்றும் ஹட்டன் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபரினால் அண்மையில் வெளியிடப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் வழிபாட்டு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புகையிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் தற்காலிக அல்லது நிரந்தர வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அன்னதானம் வழங்குவதற்கு முன்னர் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும்.
உணவு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் சுகாதாரம் உரிய முறையில் பேணப்பட வேண்டும்.
அத்துடன் சிவனொளிபாதமலை ஸ்தலம் மற்றும் ஓய்வறை உள்ளிட்ட எந்த பகுதியிலும் யாசகம் பெறுவதற்கு தடை விதிக்கப்படுவதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவனொளிப்பாதமலைக்கு பயணிப்பவர்கள் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அதேநேரம் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.