இந்தியாவை நம்ப வைத்து தமிழரை எத்தி விளையாடும் ரணிலின் அடுத்த ”ரவுண்ட்”

162 0

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ற பெயரில் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் நடத்திய சந்திப்பின் பின்னணியில் முக்கியமானது இந்தியாவின் புதிய ஸ்தானிகராக பதவியேற்றிருக்கும் சந்தோஷ் ஜாவிடம் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ் பிரதிநிதிகளுடன் நேரடியாக பேச்சை ஆரம்பித்து விட்டேன் என்று கூறி இந்தியாவை நம்ப வைப்பதற்கான உத்தி.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திக்கிறார் என்ற தகவல் வெளிவந்தபோது, முன்னைய நாட்களைப் போன்று இம்முறை பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இதற்கான பிரதான காரணம் கடந்த ஒன்றரை வருடத்தில் உறுதியளித்த எதனையும் ரணில் செய்யாததே. அதற்காக அவர் அழைக்கும்போது செல்லாது விடக்கூடாது என்று தமிழ் தேசியம் சார்ந்த நான்கு பேருக்காவது மனம் இரங்கியது அரசியலில் பெரும் விடயம்.

அந்த நான்கு பேரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இரா.சம்பந்தன், இராசமாணிக்கம் சாணக்கியன், கலையரசன், கோவிந்தன் கருணாகரன். இவர்களுள் முதல் மூவரும் தமிழரசுக் கட்சியினர். நான்காமவர் புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ரெலோவைச் சேர்ந்தவர்.

வன்னி மாவட்ட எம்.பியான ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த திலீபன் கலந்து கொண்டார். வடக்கிலிருந்து வேறெந்த எம்.பிக்களும் பங்கேற்காததுக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. காரணத்தை எவரும் கேட்கவுமில்லை. முக்கியமாக தமிழரசுத் தலைமைக்குப் போட்டியிடும் சிறீதரனும் சுமந்திரனும் இச்சந்திப்பை தவிர்த்துக் கொண்டதற்கு நிச்சயமாக காரணமிருக்கலாம்.

ரணில் என்ற குதிரையில் இறுதியாக ஏறி சறுக்கி விழுந்த சக்கடத்தார் சி.வி.விக்னேஸ்வரன். அந்த நோவு இன்னும் மாறாத நிலையில், ரணில் ஒரு ஏமாற்றுக்காரர் என்று கூறி அவரது அழைப்பை நிராகரித்து விட்டார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் சந்திப்பை மறுத்து அறிக்கை விட்டனர். வடக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் ரெலோ மற்றும் புளொட் பிரதிநிதிகளும் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

இம்முறை சம்பந்தன் சென்று ரணிலுடன் மோதிக் கொள்ளட்டும் என்று எல்லோரும் எண்ணினார்களோ என்னவோ தெரியாது. மறுதரப்பில் அரசாங்கத்தை ஆதரித்து வரும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், வியாழேந்திரன், பிள்ளையான் எனும் சிவநேசதுரை ஆகியோர் எதற்காக இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின விழாவுக்கு முன்னர் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமென தமிழர் தரப்புக்கு உறுதியளித்த ரணில், அடுத்த சுதந்திர தின விழாவுக்கு இன்னும் ஆறு வாரங்கள் இருக்கும் வேளையில் இச்சந்திப்பை நடத்தியுள்ளார். அடுத்த சுதந்திர தின விழாவுக்கு முன்னர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமென்று இச்சந்திப்பில் கூறாதது நல்ல காரியம்.

ஆனால், அடுத்த நாடாளுமன்றத்தில் தீர்வு காணப்படுமென்ற போக்கில் சிலவற்றை இங்கு கூறியுள்ளார். அதில் முக்கியமான ஒன்று, 13ம் அரசியல் திருத்த சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அவர் கூறியது. (இதற்கான முக்கிய காரணத்தை இப்பத்தியின் இறுதிப் பந்தியில் பார்க்கலாம்).

இச்சந்தர்ப்பத்தில், இதே 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றும்போது அவர் சுட்டிய முக்கியமான பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது:

‘நாட்டின் எதிர்கால நன்மைக்காக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை கூட்டாக முன்னெடுப்போம். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக மாகாண சபை தேர்தல் சட்டத்திருத்தம் அமுல்படுத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் செயற்படும்வரை மாகாண ஆளுனர்களுக்கு ஆலோசனைக் சபை வழிகாட்டல்களை வழங்கும். தற்போதுள்ள மாகாண சபை முறைமைக்குள் விரைவான அபிவிருத்தியை அடைவது சாத்தியமற்றதாகத் தெரிகிறது” – முன்னுக்குப் பின் முரணாக ரணில் தெரிவித்த கருத்துகளை இங்கு அவதானிக்கலாம்.

ஆகஸ்ட் மாத உரையில் அவர் மேலும் குறிப்பிட்டது, மாகாண சபைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்போவதாக. உரையை நிறைவு செய்கையில் உத்தேச அரசியலமைப்பை கவனமாக பரிசீலிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இங்கு சொல்லப்பட்ட எதுவுமே இதுவரை அவரால் நடைமுறைப்படுத்தப்படாத விடயங்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இதே உரையின் இன்னொரு பகுதி ரணிலின் உள்முகத்தை அம்பலப்படுத்துகிறது. அது பின்வருமாறு: ‘நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் பொருத்தமான வகையில் 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியம். தேசிய பிரச்சனையைத் தீர்ப்பது என்ற பெயரில் மாகாண சபைகளைக் கொண்டிருப்பது பற்றிய விவாதம் சுமார் தசாப்தங்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்டு எம்மீது திணிக்கப்பட்டதிலிருந்து விவாதிக்கப்பட்டு வருகிறது” என்பது.

அதாவதுஇ மாகாண சபை முறைமை என்பது 1987ல் (மூன்று தசாப்தங்களுக்கு முன்னர்) முன்மொழியப்பட்டு (இந்தியாவால்) எம்மீது (இலங்கையின் மீது) திணிக்கப்பட்டது என்ற வாசகம் ரணிலின் உள்மனதிலிருந்து வந்தது. 13ம் திருத்தத்தின் வழியாக வந்த மாகாண சபை முறைமையை தாங்கள் விரும்பவில்லையென்றும்இ தங்கள் மீது திணிக்கப்பட்டது என்றும் பகிரங்கமாகக் கூறுபவர்இ 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்து பிரதேச செயலகங்களை மாகாண சபைக்குள் கொண்டு வரவிருப்பதாகக் கூறுவதை எவ்வாறு நம்ப முடியும்?

மாகாண சபைகள் இலங்கை மீது திணிக்கப்பட்டது எனும் வாதம் சிங்களத்தின் குரலாகவே பார்க்கப்பட வேண்டியது. தேர்தல்களை சந்திக்கவிருக்கும் நேரத்தில் சிங்கள தேச வாக்குகளை நோக்கி இந்த வாக்கியம் வீசப்பட்டிருக்கிறது.

இப்போதுள்ள நாடாளுமன்றத்துக்கு போதிய அதிகாரங்கள் இல்லையென்று காரணங்கள் கூறுபவர், அடுத்து வரும் நாடாளுமன்றத்தில் பிரச்சனைத் தீர்வுகளை கையாள முடியுமென்று தமிழர் பிரதிநிதிகளுக்கு நம்பிக்கையூட்டியிருப்பது விசித்திரமானது.

அடுத்த தேர்தலின் பின்னர் வரும் புதிய நாடாளுமன்றம் அதன் ஒரு வருடத்துக்குள் அதிகாரங்களைப் பகிரும் என்று இச்சந்திப்பில் ரணில் கூறியிருப்பது எந்த வகையிலும் நம்பகத்தன்மையற்றது. நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலில் தாமே வெற்றி பெறுவோம் என நினைப்பதும்இ புதிய நாடாளுமன்றம் அமைந்த பின்னரும் தானே ஜனாதிபதியாக இருப்பேனென எண்ணுவதும், அவ்வேளை புதிய அரசியலமைப்பு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கையூட்டுவதும் ரணில் தமிழரை தொடர்ந்து ஏமாற்றுவதற்கான முயற்சி.

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இவர் பிரதமராக இருந்தபோது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அதற்கென பல குழுக்கள் அமைக்கப்பட்டு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கேற்புடன் புதிய அரசியலமைப்பு இதோ வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் ஏற்பட்ட முரணைக் காரணமாக்கி அந்த முயற்சி அம்போ என கைவிடப்பட்டது.

உண்மையாகவே ரணில் புதிய அரசியலமைப்பில் அக்கறை உள்ளவராக இருப்பின் அன்று தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் சட்ட வரைபை முன்வைத்து பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். ஆனால் அவர் விரும்புவது தீர்வு காண்பதை அல்ல. தீர்வு என்று பேசிப்பேசி காலத்தை இழுத்தடிப்பதே.

பிறக்கப்போகும் 2024ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டியது கட்டாயம். தமிழர் பிரச்சனையை 13ம் திருத்தத்தினூடாக, மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்தவே தாம் விரும்புவதாக ரணில் கூறுவதும், புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சனைக்கு தம்மால் தீர்வு காண முடியுமென கூறுவதும் தமிழர் வாக்குகளை ஜனாதிபதி தேர்தலில் சுவீகரிப்பதற்காகவே. இது தமிழர்களுக்கு நன்கு தெரிந்தது.

இதனை ரணில் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே தொடர்ந்து தமிழரை ஏமாற்ற வேண்டாமென்று நெற்றிக்கு நேராக சம்பந்தன் கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால், இதனைக் கேட்டு ரணில் அச்சமடைந்திருப்பார், சம்பந்தனிடம் சரணாகதி அடைவாரென்று எதிர்பார்ப்பது மடமை.

தமிழர் தரப்பினரை எதற்காக ரணில் அவசரமாகச் சந்தித்தாரென்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக விடயமறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதுவே உண்மையாகவும் இருக்கலாம்.

ஏற்கனவே இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தபோது 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று வாக்குக் கொடுத்தவர் ரணில். இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக சந்தோஷ் ஜா பதவியேற்பதற்கு முதல்நாள் தமிழர் தரப்பை ரணில் அழைத்துச் சந்தித்தார்.

சந்தோஷ் ஜா சம்பிரதாயபூர்வ சந்திப்பொன்றை ரணிலுடன் விரைவில் மேற்கொள்வார். அப்போது, தமிழர் தரப்புடன் நேரில் பேச்சு நடத்துகிறேன், 13ஐ முழுமையாக அமுல்படுத்தும் செயற்பாட்டில் இரு தரப்பும் ஈடுபட்டுள்ளோம் என்று கூறுவதற்கு தமிழர் தரப்புடனான சந்திப்பு அவருக்கு அவசியமாயிற்று.

இந்தியாவை நம்ப வைத்து, தமிழரை எத்தி விளையாடும், ரணிலின் அடுத்த ‘ரவுண்ட்’ ஆரம்பம்.

பனங்காட்டான்