படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் : 18 ஆண்டுகளாக மறுக்கப்படும் நீதி

77 0

தமிழ் பற்றாளர், ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என பன்முகம் கொண்ட ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்தும் நீதி கிடைக்காமல் உள்ளது.

2005ஆம் ஆண்டு நத்தார் தினம் அன்று மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தின் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்ட பொது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு கொல்லப்பட்டார்.

செய்தியாளராக 1960ஆம் ஆண்டிலிருந்து பணியாற்ற தொடங்கிய அவர், குணசேனா பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட தினபதி, சிந்தாமணி மற்றும் சண் போன்ற பத்திரிகைகளுக்கு மட்டக்களப்பு செய்தியாளராக பணியாற்றி வந்தார்.

1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஏற்பட்ட பெரும் சூறாவளிக்கான நிவாரண நிதிகளில் பல்வேறு ஊழல் மோசடிகள் காணப்பட்டன.

ஜோசப், அவற்றை ஆதாரங்களுடனும் துல்லியமான தரவுகளுடனும் சூறாவளி பூராயம் என்ற தலைப்பில் தொடர்கட்டுரை வடிவில் சிந்தாமணி பத்திரிகையில் எழுதினார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள செய்தியாளர்களை இணைத்து 1982ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முதலாவது தலைவராக ஜோசப் செயற்பட்டார்.

படையினரின் கைதுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் 1980இற்கு பின்னர் அதிகரித்து சென்றமையால் மட்டக்களப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஜோசப், கைது செய்யப்படும் இளைஞர்கள் பற்றிய தகவல்களை திரட்டி சர்வதேச மன்னிப்பு சபை போன்ற சர்வதேச அமைப்புகளினது கவனத்திற்கு கொண்டு சென்றார்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஜோசப் பரராஜசிங்கம், தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் 1990ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாம் தம்பிமுத்து இறந்ததன் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட முன் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக பொலிஸாரால் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.