போதைப்பொருளுக்கு எதிரான அண்மைய யுத்தம் கேலிக்கூத்து

57 0

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், நடுத்தர மற்றும் உயர்மட்டத்திலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களை இலக்குவைப்பதன் மூலம் பெருந்தொகையான போதைப்பொருட்களைக் கைப்பற்றமுடியும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 10,000 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சுற்றிவளைப்புக்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவை மேற்கோள்காண்பித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தம் ஏன் ஒரு கேலிக்கூத்தாகத் தெரிகிறது? என அப்பதிவில் கேள்வி எழுப்பியிருக்கும் அவர், கடந்த வாரம் 5 நாட்களாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் 10,000 க்கும் மேற்பட்டோரின் கைது ஆகியவற்றின் பின்னர் 7.7 கிலோகிராம் ஹெரோயின், 3.8 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 225.7 கிலோகிராம் கனபிஸ் போதைப்பொருள் மற்றும் 44,267 போதை மாத்திரைகள் என்பனவே மொத்தமாகக் கைப்பற்றப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்ட போதைப்பொருள் பாவனை மற்றும் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட நேரம் மற்றும் வளங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மிகச்சிறிதளவானவையே எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இது போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என்பதையே காண்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடுத்தர மற்றும் உயர்மட்டத்திலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களை இலக்குவைப்பதன் மூலம் பெருந்தொகையான போதைப்பொருட்களைக் கைப்பற்றமுடியும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், எனவே போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மிகமுக்கிய தரப்பினர் பற்றி அறிந்துகொள்வதற்கு ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்களை விசாரிக்கவேண்டும் என்று கூறமுடியாது எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.