புதிய அரசியலமைப்பின் ஊடாக13 ஐ அகற்றுவதே அரசின் நோக்கம்

57 0

புதிய அரசியலமைப்பின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதையே ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தொடர்ச்சியாக தலையீடு செய்துவரும் இந்தியாவை அவ்விடயத்திலிருந்து முழுமையாக களைவதற்கு பெரும் சதிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது, புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிகாரப்பகிர்வு விடயங்களை மையப்படுத்தி ஒரு வருடங்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கு தற்போதைய பாராளுமன்றத்துக்கு ஆணையில்லை என்றும் புதிய பாராளுமன்றத்தில் ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு மற்றும், அதிகாரப்பகிர்வு விடயங்கள் கையாளப்படப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் காணப்படுகின்றது. அதுபாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட விடயமாகும். அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்தவிதமான தடைகளும் காணப்படவில்லை.

ஆனாலும் அந்த விடயங்களை கையாள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாரில்லாதவராக காணப்படுகின்றார். இதற்கான காரணம் எமக்குப் புரியவில்லை. அதேநேரம்,  புதிய அரசியலமைப்பின் பெயரில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இலக்காகக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அதுமட்மன்றி, தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா காத்திரமான வகிபாகத்தினைக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்தியா, இலங்கை ஒப்பந்தம் அதற்கான ஒரு சான்றாக அமைகின்றது.

இந்நிலையில், அரசாங்கம், புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு உள்ளிட்டவிடயங்களை வழங்குவதாக கூறி, இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீட்டை முழுமையாக களைவதற்கே சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படு வதாகவே நாம் கருதுகின்றோம்.

மேலும்,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் புதிய அரசியலமைப்பு பற்றிபேசுகின்றார். ஏற்கனவே அவர் பிரதமராக இருந்த தருணத்தில் பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டு,  இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில் எந்த முன்னெடுப்புக்களுமின்றி அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அவர் மீண்டும் புதிய அரசியலமைப்பு பற்றி பேசுவதற்கு பதிலாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைச்சாத்தியமாக்குவது தொடர்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்விகள் காணப்படுகின்றன.

எம்மைப் பொறுத்தவரையில்,  தற்போதைய அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்க வேண்டும். அதன் பின்னர் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான விடயங்களை படிப்படியாக முன்னெடுக்க வேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.

அதனைத் தவிர்த்து காலங்கடத்திச் செல்லும், செயற்பாடுகளுக்கும்,  இந்தியாவை புறந்தள்ளுவதற்கு முயற்சிக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்க முடியாது என்றார்.