பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கத் தயார் – சி.வி.விக்னேஸ்வரன்

69 0

தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசினேன் சரிவராது என தோன்றியதால் விலகினோன் என்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (21.12.2023) வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்படும்போது சிலர் இவர் ரணிலின் ஆள் என்றனர். நான் யாருடைய ஆளுமல்ல தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்தேன் அது நடைபெறவில்லை.

நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேடிச் செல்லவில்லை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் என்னை அவர் சந்தித்தபோது இணைந்து செயல்பட வருமாறு அழைத்தார்.

ஒரு ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் மக்களுக்காக சென்று பேசுவது அரசியல் நாகரீகம் நான் கொமிஷன் வேண்டுபவன் அல்ல. சிலர் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முன்னரே சரி வராது என கூறுவது சிறுபிள்ளைத்தனம் பேசிப் பார்த்து சரி வராது என்ற பின விலகுவது அறிவாளித்தனம். அதையே நான் செய்தேன்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க போவதாக பலர் பேசுகின்றனர்.

ரணில் விக்கிரமாசிங்கவை இன்று நேற்று அறிந்தவன் நான் அல்ல என்னை விட பத்து வயது இளமை என்றாலும் பாடசாலை காலத்திலிருந்து அவரை எனக்கு நன்கு தெரியும்.

சிங்களத் தலைவர்களுடன் ஒப்பிடும் போது இனவாதம் அற்றவர் அவரது குடும்ப பின்னணி எல்லோருடனும் இணைந்து செயற்படக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. ஆனால் பல சந்திப்புகளை மேற்கொண்டேன் 13 திருத்தம் தொடர்பில் நடைமுறை தன்மையை ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைப்பதற்கு இணங்கினார்.

ஆறு துறை சார்ந்த நிபுணர்களின் பெயர்களை வழங்கினோன் குழு அமைக்கப்படவில்லை. தற்போது நடைபெற்ற வரவு செலவு திட்டத்தில் அவர் பேசிய கருத்துக்கள் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

மாகாண சபையை இல்லாத ஒழித்து மாவட்ட அபிவிருத்தி குழு ஒன்றின் ஊடாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக காத்திருக்கிறார் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

13 ஆவது திருத்தத்தை அரசியல் அமைப்பில் இருந்து அகற்றுவதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க செய்ய நினைக்கிறார். இவ்வாறானவருடன் இணைந்து செயல்பட முடியாது தமிழ் மக்களும் எந்த ஒரு சிங்கள ஜனாதிபதியிடமும் தமக்கான தீர்வுகளை எதிர்பார்ப்பது கடினமான விடயம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவது சிறந்ததா அல்லது ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி எமது பலத்தை கட்டுவது சிறந்ததா என பார்த்தால் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது எனது விருப்பம்.

ஒலிம்பிக்கில் சாதித்த எதிர்வீரசிங்கத்தை தொடர்பு கொண்டு பேசி ஜனாதிபதி வேட்பாளராக வாருங்கள் சிங்கள மக்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு உள்ளது என்றேன் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் இயலாது என்றார்.

நான் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்தபோது பலரின் வற்புறுத்தலின் பேரில் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக வந்தேன். வந்த பின் என்னையே அப்புறப்படுத்தும் வேலைகளை எம்மவர்களே செய்தார்கள் மக்களின் ஆதரவினால் தப்பினேன்.

ஆகவே தமிழ் கட்சிகள் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்ந்து பொது வேட்பாளராக போட்டியிடுமாறு கோரினால் அப்போதைய கள நிலவரங்களைப் பார்த்து பரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.