இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை நினைவுகூர்ந்தார் யுனிசெப் அமைப்பின் பேச்சாளர்

179 0

காஸாவின் தற்போதைய நிலைவரம் குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் யுனிசெப் அமைப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பில் நினைவுகூர்ந்துள்ளார்.

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டிருக்கும் யுனிசெப் அமைப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர், 2007 – 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தான் இலங்கையில் இருந்தபோது பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவினால் இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபையும் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘உலகிலேயே சிறுவர்களுக்குப் பாதுகாப்பற்ற, மிகவும் ஆபத்தான பகுதியாக காஸா இருக்கின்றது.

ஒவ்வொரு நாளாகக் கடக்கும்போது இந்த உண்மை மீளவும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

சீராக இயங்கிக்கொண்டிருந்த மிகப்பெரிய வைத்தியசாலையின்மீது கடந்த 48 மணித்தியாலங்களில் இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

அவ்வைத்தியசாலையில் ஏற்கனவே வேறு பகுதிகளிலும், வீடுகளிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் மிகமோசமாகக் காயமடைந்த பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் மாத்திரமன்றி, பாதுகாப்பைக் கோருகின்ற நூற்றுக்கணக்கான பெண்களும், சிறுவர்களும் இருந்தனர்’ என்று சுட்டிக்காட்டியுள்ள ஜேம்ஸ் எல்டர், இதனுடன் தொடர்புபட்ட வகையிலேயே இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபித்துள்ளார்.

அத்தோடு காஸாவில் ‘பாதுகாப்பு வலயங்களாகப்’ பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் எந்தவொரு பகுதியும் சிறுவர்களுக்குப் பாதுகாப்பானவை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.