அலி சப்ரி காத்மண்டு பயணம்

58 0

வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று புதன்கிழமை (20) காத்மண்டு பயணமானார்.

இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வில் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவிருக்கும் உயர்மட்டக்குழுவுக்குத் தலைமைதாங்கவுள்ள அமைச்சர் அலி சப்ரி, நேபாள வெறியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இணைந்து இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வுக்கு இணைத்தலைமை தாங்குவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அமர்வில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு என்பன உள்ளடங்கலாக பல்வேறு துறைகளிலும் இலங்கை – நேபாளம் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

அதுமாத்திரமன்றி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை முன்னிறுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது.

அதேவேளை நாளை வெள்ளிக்கிழமை (22) வரை காத்மண்டுவில் தங்கியிருக்கும் அமைச்சர் அலி சப்ரி, கூட்டு ஆணைக்குழு அமர்வின் பக்க அம்சமாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அதுமாத்திரமன்றி அவர் நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் மற்றும் பிரதமர் புஷ்ப கமல் தஹல் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேபாளத்திலுள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.