அரசாங்கம் பயணிக்கும் பாதையை தவிர வேறு பாதை இல்லை

21 0

இலங்கை எதிர்வரும் ஜனவரியில் இருந்து வங்குராேத்து நிலையில் இருந்து மீள்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் உலக நாடுகளின் உதவிகள் எமக்கு கிடைக்கப்பெறும்.

இதற்கான அனைத்து கெளரவமும் ரணில் விக்ரமசிங்கவுக்கே சேரவேண்டும். அதனால் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் பயணிக்கும் பாதையை தவிர வேறு பாதை இல்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆட்சியாளர்களின் பிழையான தீர்மானங்களால் 2022 ஏப்ரல் 12ஆம் திகதி எமது நாடு வங்குராேத்து அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்தோம் . எமக்கு கடன் வழங்க யாரும் முன்வரவில்லை. நாட்டில் தேசிய விழாக்கள் எதவும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க யாரும் முன்வரவில்லை. சில அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி பெயர் பலகையை மறைத்துக்கொண்டார்கள்.

அரசியல்வாதிகளுக்கு வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம மே 12ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டை மீட்பதற்கு முன்வந்தாா்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது நாட்டில் எரிபொருள் இல்லை. எரிவாயு இல்லை. அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு. இவற்றை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் இருக்கவேண்டிய நிலை. எரிபொருள் பெளசர் வரும்போது  கை தட்டி வரவேற்கும் சமூகமே அன்று இருந்தது. இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க அனைவரதும் ஒத்தைழப்பை அவர் கோரி வந்தார். அதன் பிரகாரமே அவர் ஜூலை 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் 134 வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

நாடு வங்குராேத்து அடைந்து ஒருவருடமும் 6மாதங்களுக்குள் நாட்டை வங்குராேத்து நிலையில் இருந்து மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாகி இருந்துள்ளது. உலகில்  வங்குரோத்து அடைந்த நாடுகள் பல இருக்கின்றன. அவை இன்னும் அதில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றன.ஆனால்   எமது நாட்டுக்கு குத்தப்பட்டிருந்த வங்குராேத்து என்ற முத்திரையை ரணில் விக்ரமசிங்க ஒருவருடம் 6மாதங்களில் அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாக எமது வங்கி கடன் அட்டையை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலகில் இருக்கின்ற அதிகார பலமிக்க பல தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியே இந்த மாற்றத்தை ஏற்படுத்த  நடவடிக்கை எடுத்தார். அதனால் இதன் பின்னர் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். நாடு மீண்டும் வங்குராேத்து நிலைக்கு செல்ல இடமளிக்க கூடாது. அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகளை வழங்குதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தை பலப்படுத்தி இருக்கிறோம்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் வழங்கி இருக்கி்ன்றன. அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாலே எமக்கு கடன் வழங்க நாணய நிதியம் முன்வந்திருக்கிறது. இதன் மூலம் ஜனவரி முதல் அனத்து நிதி நிறுவனங்களில் இருந்தும் எமக்கு உதவிகள் கிடைக்க ஆரம்பிக்கும். அதன் மூலம் படிப்படியாக வரி குறைப்பு செய்யவும் மின்சார கட்டணங்களில் குறைப்பு செய்யவும் முடியுமாகும்.

எனவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் தற்போது செல்லும்  வழியை தவிர வேறு வழியில்லை. எதிர்வரும் 20 வருடங்களில் இலங்கையை ஆசியாவில் முன்னணி நாடாக கொண்டு செல்வதே எமது இலக்காகும் என்றார்.