முத்தையன்கட்டு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு : 4 வான் கதவுகளும் திறப்பு

51 0

முத்தையன்கட்டு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்துஐயன்கட்டு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில் குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குளங்கள் வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றனர்.

தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,289 குடும்பங்களை சேர்ந்த 4,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 279 குடும்பங்களை சேர்ந்த 884 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது மிக கனதியாக குறுகிய நேரத்தில் கிடைப்பதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகள் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன், இந்நீர் வழிந்து ஓட முடியாத நிலைமையையும் காணப்படுகின்றது. அத்தோடு அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொள்கின்றது.