நானும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மக்களுக்கு ஒரு தெளிவான திட்டத்தை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் மக்களின் ஆணைக்கு மாறாக ஐக்கிய தேசிய கட்சியுடன் கைக்கோர்த்து செயற்படுகிறார்கள்.
மொட்டுக் கட்சியின் கொள்கைகளை ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுடன் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் கண்டிக்குச் சென்ற அவர் மல்வத்து பீடத்தின் நியங்கொட விஜிதசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதுடன் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைவராகவும் நான் கட்சியின் செயலாளராகவும் ஒரே மேடையில் இருந்து என்ன செய்தோம். மக்களுக்கு நாம் ஒரு தெளிவான திட்டத்தை முன்வைத்தோம். மக்கள் அந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கினர்.
இருந்த போதிலும் தற்போது அவர்கள் என்ன செய்கிறார்கள். மக்களின் ஆணைக்கு மாறாக ஐக்கிய தேசிய கட்சியுடன் கைக்கோர்த்து செயற்படுகிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுகின்றனர்.
இந்த கரம் பிடிப்பே மொட்டுக் கட்சிக்குள் இருக்கும் பிரதான பிரச்சினையாகும். இது பொருந்தாத ஒன்றாகும். மொட்டுக் கட்சியின் கொள்கைகளை ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுடன் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது என்றார்.

