உலகத் தமிழர் பேரவை மற்றும் சதிகாரர்களின் துரோக முயற்சியை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்!

127 0

உலகத் தமிழர் பேரவை மற்றும் அதனுடன் இணைந்த சதிகாரர்களின் பௌத்த தேரர்கள் ஊடான முயற்சியை முழுமையாக நிராகரிப்பதாகவும், அதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும்  16 புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டான அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை அறிவித்துள்ளது.

குறித்த அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2009ஆம் ஆண்டில் தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தில், உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்புகள், அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உலகளாவிய தமிழ் புலம்பெயர் அமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தன.

அதற்கமைவாக, தமிழ் மக்களின் நியாயமான மற்றும் அடிப்படை அபிலாஷைகளை முன்னேற்றுவதற்காக உலகத் தமிழர் போரவை உருவாக்கப்பட்டது.

அவ்வமைப்பு உருவாக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகளுக்குள், உலத் தமிழர் பேரவை ஒரு சில நபர்களால் ஜனநாயகமற்ற முறையில் நகர்த்தப்பட்டு, தமிழ் மக்களின் நியாயமான மற்றும் அடிப்படையான அபிலாஷைகளிலிருந்து விலகிச்சென்றது.

இதன் விளைவாக, கனடிய தமிழ் காங்கிரஸ் தவிர ஏனைய அனைத்தும் அமைப்புக்களும் உலகத் தமிழர் பேரவையிலிருந்து வெளியேறின. இதனையடுத்து உலகத் தமிழர் பேரவை புலம்பெயர் தமிழ் மக்களின் அடிப்படை ஆதரவின்றி இருந்தது.

இந்நிலையில் உலத் தமிழர் பேரவையும், கனடிய தமிழ் காங்கிரஸும் இனப்படுகொலைக்காகவும், தமிழ் மக்களின் நியாயமான மற்றும் அடிப்படை அபிலாஷைகளுக்காகவும் செயற்பட மறுத்துவிட்டன.

பின்னர் உலகத் தமிழர் பேரவையிலிருந்து வெளியேறிய 16 அமைப்புக்கள் அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை உருவாக்கியது. இது தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்காக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

2011ஆம் ஆண்டு முதல் அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவையானது உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைந்துள்ளதுடன், நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பங்காளி அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்று தாயகத்தில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நீடித்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.

இதேநேரம் இலங்கையில் தமிழ் மக்களின் நிலைமை மோசமடைந்து, அவர்களின் தாயகத்தில் அடிப்படை உரிமைகள் அற்ற திறந்தவெளி சிறைச்சாலைக்குள் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நீக்க வேண்டுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம், சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த தங்கள் மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்களை நினைவுகூரும் தமிழ் மக்களை துன்புறுத்தவும் சிறையில் அடைக்கவும் இலங்கை அரசால் பயன்படுத்தப்படுகிறது.

தொல்பொருள் திணைக்களம், புண்ணிய மதத் தலங்களை அழித்து, அந்த புனிதத் தலங்களுக்கு பதிலாக பௌத்த நினைவுச்சின்னங்களையும், பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழர் தாயகத்தில் ஆயிரம் பௌத்த விகாரைகளை கட்டுவதாக இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கடந்த ஏழு தசாப்தங்களில் தமிழ்த் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இரத்து செய்தமைக்கான நீண்ட ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்காக பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. எவ்வாறாயினும், தீர்மானங்களின் பரிந்துரைகள் எவற்றிலும் இதுவரை இலங்கை அரசாங்கத்திடமிருந்து உறுதியான முன்னேற்றம் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆகவே, தமிழ் மக்களுக்கு எதிரான சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் உள்ள 30 சரத்துக்களையும் இலங்கை தண்டனையின்றி மீறியுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு காரணமான ஒவ்வொரு படைச் சிப்பாயையும் பாதுகாப்பதாக சபதம் செய்தே இலங்கையின் தற்போதைய தலைமை உட்பட அடுத்தடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் உள்ளனர்.

எனவே, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை எந்த வகையிலும் உண்மையான நீதியை நிலைநாட்டும் அல்லது தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.

2024ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிராகரிக்கும் என்றே  எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறியவற்றின் அடிப்படையில், இலங்கை மீண்டும் ஒரு முறை துறவறம் செய்ய விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே உலகத் தமிழர் பேரவை மற்றும் அதனுடன் இணைந்த சதிகாரர்களின் துரோக முயற்சியானது, சர்வதேச சமூகத்திலிருந்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆய்விலிருந்தும் இலங்கையை பாதுகாக்கும் வெறுக்கத்தக்க முயற்சியாகும்.

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் சீர்குலைக்கும் முயற்சியே உலகத் தமிழர் பேரவையின் இமயமலைப் பிரகடன நிகழ்ச்சியாகும்.

இந்த ஏமாற்று முயற்சிகளை புறக்கணிக்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அரைகுறையான தீர்வு தமிழ் தேசத்தின் பாதுகாப்பை மேலும் சீரழிக்கும்.

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் பரிகார நீதி வழங்குவதுடன், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் நீண்டகால அரசியல் தீர்வைக் காண உதவ வேண்டும் என்றுள்ளது.