வடக்கில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு : 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகம்

54 0

வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

(076 -1799901) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக தொடர்பு கொண்டும் வட்ஸப் மூலமாகவும் முறையிட முடியும். முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாணத்தில் இந்த வருடத்தில் சுமார் 3100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் இரண்டு மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் ஒருவர் யாழ்.நகரத்தைச் சேர்ந்தவர், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவராவார்.

யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், பருத்தித்துறை,கரவெட்டி ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.எனவே பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தகுதிவாய்ந்த வைத்தியரை நாடுவது சால சிறந்தது ” என தெரிவித்துள்ளார்.