தமிழர்கள் வலியுறுத்திய அடிப்படை உரிமைகள் இமயமலை பிரகடனத்தில் உள்ளடங்கவில்லை – அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு விசனம்

116 0

உலகத்தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள ‘இமயமலை பிரகடனத்தில்’ தமிழ்மக்களால் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு, அதனை வெளியிட்டவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதை அவதானிக்கமுடிவதாக விசனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலை’ பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. இதுகுறித்து டென்மார்க்கை தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு’ என்ற புலம்பெயர் தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகத்தமிழர் பேரவைக்கும், சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் எனும் புத்த பிக்குகளின் சங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடிப்படையாகக்கொண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ‘இமயமலை பிரகடனம்’ எனும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் செய்தி பரப்பப்பட்டது.

சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் உலகத்தமிழர் பேரவைக்கும், புத்த பிக்குகளின் சங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலானது இலங்கை அரசாங்கத்தினாலும், அதன் ஊடகப்பிரிவினாலும் மேற்கூறப்பட்டவாறு மிகத்தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக சர்வதேச சமூகத்தின் முன்பாக இலங்கை அரசின் தலையிடாக்கொள்கையை முன்னிறுத்துவதாகக்கூறி, இலங்கைக்கு சாத்தியமான வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்விளைவாக இலங்கையின் பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் மென்மேலும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே இவ்விடயத்தை மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் கையாளவேண்டும்.

தமிழீழ மக்கள் தனிச்சிங்கள சட்டம், அரசினால் அனுமதிக்கப்பட்ட வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவழிப்பு போன்றவற்றால் சுமார் 6 தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக அடக்குமுறைகளை அனுபவித்துவருகின்றனர். துரதிஷ்டவசமாக வன்முறை வடிவிலான அடக்குமுறை என்பது எமது மக்களது இருப்பின் ஓரங்கமாகவே மாறிவிட்டது. தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்கள், தமது தன்னாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக பல தசாப்தங்களாக அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவை பலனளிக்காததால் தம்மைத் தற்காத்துக்கொள்வதற்கு ‘இதுவே ஒரே வழி’ என ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நிச்சயமற்ற சூழலில் ஊற்றெடுத்த இந்த எதிர்ப்பு மட்டுமே எமது மக்களின் குரலாக ஒலிக்கின்றது. நீண்டகாலமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் உச்சமாகவே 2009 மே மாதம் இடம்பெற்ற இனவழிப்புப்போர் அமைந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபூர்வமான தமிழ்ப்பிரதிநிதிகள் என இமயமலை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி தகுந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது. ஏனெனில் தமிழ்மக்களால் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் எவையும் அப்பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை. குறிப்பாக சுதந்திர தமிழீழமே தமிழருக்கான தீர்வு என்று 1976 இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமும், அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் 2010 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அப்பிரகடனத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே இவர்களது (பிரகடனத்தை வெளியிட்டவர்கள்) கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

நாம் இராஜதந்திர ரீதியிலான சமாதானப்பேச்சுக்களின் மூலம் நிரந்தர தீர்வை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம். தமிழர் தாயகத்தை ஒரு தனித்துவமான தேசமாகவும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் கருத்துக்களைக்கொண்ட அரசியல் பேச்சுக்களை நாம் வரவேற்கின்றோம். சர்வதேச நாடுகளின் ஊடாக இதற்கான பரிந்துரையைப் பெறுவதற்குத் தீவிரமாக முயற்சிக்கின்றோம். எதுஎவ்வாறெனினும் இப்பேச்சுக்களின் வெற்றியானது தமிழர் தாயகத்தின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை அங்கீகரிப்பதிலும், அவற்றுக்கான சரியான தீர்வுகளைக் காண்பதிலுமே தங்கியுள்ளது. இந்த அடிப்படைப் பிரச்சினைகளை அங்கீகரிப்பது சமாதானப்பேச்சுக்களில் எமது முழுமையான பங்களிப்புக்கு வழிகோலும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.