விமானத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை திருடிய சீன பிரஜை தலைமறைவு

116 0
விமானத்தில் வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரிவில் பயணித்த லெபனான் பிரஜையிடமிருந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை திருடியதாக கருதப்படும் சீன பிரஜை ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வர்த்தகர் 47 வயதுடைய லெபனான் பிரஜையாவார்.

இவர் தனது தாயின் வைத்திய சிகிச்சைக்காக தாயுடன் ஓமான் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் நேற்று புதன்கிழமை (13) காலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர் விமானத்தில் பயணிக்கும் போது இரவு நேர பயணம் என்பதால் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர் இதனால் விமானத்தின் விளக்குகளும் அணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தகரின் பயணப்பையை திறந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான 14 ஆயிரம் அமெரிக்க டொலர்களை திருடியுள்ளார்.

இதனை அறியாத வர்த்தகர் விமானத்திலிருந்து இறங்கி கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் அமெரிக்க டொலர்களை இலங்கை பணத்திற்கு வங்கியில் மாற்ற முற்பட்ட போது பணம் திருடப்பட்டதை அறிந்துள்ளார்.

இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியதையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள சீன பிரஜை தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.