மீன்பிடி, அபிவிருத்தி நடவடிக்கையில் மன்னார் மாவட்டம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது

40 0

மீன்பிடி மற்றும் இதர அபிவிருத்தி நடவடிக்கைகளில் மன்னார் மாவட்டம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் முஹமட் ஆலம் அவர்கள் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.

மன்னாரில் செயற்படாமல் இருக்கும் மீனவர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை இணைத்து எவ்வாறு செயற்படுத்துவது என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் பங்குத்தந்தை மார்க்கஸ் அடிகளார் அவர்களின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை  (12)  காலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஆலம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

மீன்பிடி நடவடிக்கைகள் மட்டுமல்ல  மன்னார் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்தி செயல்பாடுகளிலும் மன்னார் மாவட்டமானது ஓரங்கட்டப்பட்ட வருகிறது என்பதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம்.

அந்த வகையில் இன்றைய கூட்டத்தில்  மாவட்ட ரீதியாக நடைபெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் தேதி கிராமிய அமைப்புகளை செயற்படுத்துவதற்காக  புதிய நிர்வாக கட்டமைப்புகளை தெரிவு செய்யப்பட இருப்பதாக கூட்டத்தில் இன்றைய முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்ட மீனவர் நலன் சார்ந்து இயங்குகின்ற பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக நிர்வாக கட்டமைப்புக்குள் இருக்க வேண்டும் என்றும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அத்துடன் மாவட்டத்திற்கு வருகின்ற எந்தவிதமான திட்டங்களாக இருந்தாலும் சரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்குமாக இருந்தால் அவற்றிற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம்.

அதேபோல் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கும் செயல்பாடுகளுக்கும் ஏதேனும் பாதகங்கள் இருந்தால் அவ்வாறான திட்டங்களுக்கு நாங்கள் தடையாக இருப்போம் என்றும் இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறோம் என்று மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் சமாசத் தலைவர் முஹமட் ஆலம் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவினர் மன்னார் மற்றும் முசலி மீனவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் தலைவர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .