பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை

131 0

சட்டவாட்சிக் கோட்பாட்டை முறையாக செயற்படுத்தினால் மாத்திரமே வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறும்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் சட்டவாட்சிக் கோட்பாடு மீதான நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

வரி கொள்கையால் ஒட்டுமொத்த மக்களும் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நடுத்தர மக்கள் தமது அன்றாட தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதை நாங்கள் தடுக்கவில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அரசாங்கம் செயற்படுகிறது. நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்குமாறு வரி விதிக்க நாணய நிதியம் குறிப்பிடவில்லை.

ஊழல் மோசடியை இல்லாதொழித்து அரச  வீண் செலவுகளை மட்டுப்படுத்துமாறு குறிப்பிட்டது. ஆனால் இந்த யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு திங்கட்கிழமை (11) சேர்பெறுமதி (வற்) வரி சட்டமூல விவாதத்தில் எமக்கு உரையாட வாய்ப்பளிக்கவில்லை.

வசதி படைத்தவர்களிடமிருந்து வரி அறவிடுவதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.904 பில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு தேசிய இறைவரித் திணைக்களம் முறையாக செயற்படவில்லை.

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வரி கொள்கையை தவிர்த்து நடைமுறையில் உள்ள வரி கொள்கை வலையமைப்பை சிறந்த முறையில் முறையாக செயற்படுத்தினால் தேசிய வரி வருமானத்தை முறையாக  பெற்றுக்கொள்ளலாம்.

வரிகளை அதிகரித்தால் மாத்திரம் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்பதை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ,முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான கப்ரால்,லக்ஷ்மன்,மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர உள்ளிட்ட பலர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேசியத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள் என்றார்.